ஒரு மாதத்தில் கொத்தவரைக்காய் பறிக்கலாம். எப்படி?

 |  First Published Dec 17, 2016, 12:29 PM IST



மழைக்காலம் தொடங்கிவிட்டது இனி, வீட்டுத்தோட்டத்தில் புதிய செடிகள் நட ஆரம்பிக்கலாம். வெயில் ஓய்ந்த நிலையில், வீட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச அளவிலான காய்கறிகளையாவது நஞ்சு இல்லாமல் நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டில் வளர்க்க வேண்டிய காய்கறிகளில் நார்ச்சத்துக்காக பரிந்துரைக்கப்படுவது கொத்தவரை. இதை எளிதாக வளர்க்கலாம், ஒரு மாதத்திலேயே காய்களை பறிக்கலாம்.

விதைக்கும் முறை:
ஒரு நடுத்தர அளவிலான தொட்டியில் மூன்று செடிகளை வளர்க்கலாம். தொட்டில் ஏற்கனவே மண் இருந்தால், அதைக் கீழே கொட்டி, கிளறி, அதில் ஏற்கனவே இருந்த செடியின் வேர் போன்ற மிச்சங்கள் இருந்தால் அதை நீக்கிவிடுங்கள். இந்த மண்ணுடன் இயற்கை உரம் ஒரு பங்கு சேர்த்து கலந்து கொள்ளவும். தொட்டியின் அடியில் சிறிதளவு மணல் போட்டு அதன் மேல் கலந்து வைத்த மண்ணை தொட்டியின் முக்கால் பாகம் போட்டு நிரப்புங்கள். அதில் நீர் ஊற்றி வையுங்கள்.
கொத்தவரை விதைகளாக நடப்பட்டு செடியாகிக் காய்க்கக்கூடியது. தயாராக வைத்திருக்கும் தொட்டியில் விதைகளை ஒரு இன்ச் ஆழத்துக்கு ஊன்றி நீர் ஊற்றுங்கள். மூன்றாவது நாளில் விதை முளைவிட ஆரம்பிக்கும்.

Latest Videos

undefined

பராமரிப்பு முறை:
மழை நாட்களைத் தவிர, தொட்டியின் ஈரப்பதம் குறைந்திருப்பதை அறிந்து தினந்தோறும் நீர் ஊற்றுங்கள். வெயில் கடுமையான நேரங்களில் இரு வேளையும் நீர் ஊற்றலாம். நீர் தொட்டியில் தேங்கக்கூடாது.

பூச்சிகளை கட்டுப்படுத்துதல்:
சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவை செடிகளின் ஆரம்ப வளர்ச்சியை அதிகமாக பாதிக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கரைசல் கொண்டு செடிகளின் மீது வாரத்திற்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

உரமிடுதல்:
சத்தான காய்களை அறுவடை செய்ய உரமிடுதல் அவசியம். வீட்டில் செடிகள் வளர்ப்பதே வேதியியல் உரங்கள் இடாமல், இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்கிற காரணத்தால்தான். அதனால் இயற்கை முறையில் தயாரித்த உரங்களையே பயன்படுத்துங்கள்.

அறுவடை:
கொத்தவரை காய்களை இளம் பிஞ்சாக இருக்கும்போது பறிக்க வேண்டும். 30 நாட்களில் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். 4 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பறிக்கலாம். 2 மாதங்கள் நல்ல உற்பத்தி இருக்கும். கொத்தவரைக்கு வீட்டில் உள்ள தேவையைப் பொறுத்து, தொட்டிகளின் எண்ணிக்கை கூட்டிக் கொண்டு போகலாம்.

click me!