கோழிகளைத் தாக்கும் மேரக்ஸ் நோய் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகள்...

 |  First Published Nov 21, 2017, 12:53 PM IST
Information about morax disease and its prevention methods that attack chicken ...



மேரக்ஸ் நோய் 

நோயின் தன்மை

** இந்நோய் கோழிகளைத் தாக்கக்கூடிய வைரஸ் மூலம் ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோயினால் தாக்கப்பட்ட கோழிகளில் நரம்பு வீக்கமும், உள் உறுப்புகள் வீக்கமும் ஏற்படும்.

** இந்நோய் ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும்.

நோய்க்கான காரணங்கள்

** இந்நோய் ஹெர்ப்பீஸ் வைரஸ் எனும் வைரஸால் ஏற்படுத்தப்படுகிறது.

** இந்த வைரஸ் கோழிக் கொட்டகைகளில் 370C வெப்பநிலையில் 24 மணி நேரம் உயிருடன் இருக்கும். மேலும் கோழிகளின் எச்சத்திலும், ஆழ்கூளத்திலும், கோழிப்பண்ணையிலுள்ள தூசுகள், இறகுகளின் வேர்ப்பகுதிகளிலும், கோழிகளின் தோலிலுள்ள பொடுகிலும் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும்.

** இறகுகளில் வேர்ப்பகுதியில் இந்த வைரஸ் முதிர்ச்சியடைந்து அவற்றிலிருந்து சுற்றுப்புறத்தில் வெளியேறும்.

** பொதுவான கிருமி நாசினிகள் இந்த வைரஸை 10 நிமிடத்தில் செயலிழக்கச் செய்து விடும்.

** இந்த வைரஸ் கோழிப்பண்ணையிலுள்ள ஆழ்கூளம் மற்றும் தூசுக்களில் பல மாதங்கள் வரை உயிரோடு இருக்கும். பொடுகு மற்றும் கோழிப்பண்ணையிலுள்ள தூசுகள் வழியாக இந்த வைரஸ் நன்றாகப் பரவும்.

** கோழிகளுக்கிடையே ஏற்படும் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளாலும், காற்று வழியாகவும், இந்நோய்க்கிருமி எளிதில் பரவும்.

** கோழிப்பண்ணைகளிலுள்ள கோழிகள் இருக்கும் இடத்தில் இந்த வைரஸ் புதிதாக நுழைந்தால், கோழிகள் இந்நோய்க்கெதிராக எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தாலும் எளிதில் அவைகளுக்கிடையே பரவிவிடும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் நீண்ட நாட்களுக்கு இந்த வைரஸை வெளியேற்றும் நோய் தாங்கிகளாகச் செயல்படும். தடுப்பூசி ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட கோழிகள் வெளியேற்றும் வைரஸின் அளவு குறையுமே தவிர வைரஸை வெளியேற்றுவது நிற்காது.

** உயிரற்ற பண்ணை உபயோகப் பொருட்கள், பண்ணையாட்கள், பூச்சிகள் வழியாகவும் இந்த வைரஸ் பரவும்.

** முட்டைகளின் வழியாக இந்த வைரஸ் பரவுவதில்லை.

** வணிக ரீதியாக வளர்க்கப்படும் கோழிப்பண்ணைகளில் மேரக்ஸ் நோயின் தாக்கம் வேறுபடும். இது வைரஸின் வகை, கோழிகளின் உடல் உள்ளே நுழையும் வைரஸின் அளவு, கோழிகளின் வயது, கோழிகள் தாய்க்கோழியிடமிருந்து பெற்ற மேரக்ஸ் நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தி, பாலினம், மரபியல் குணநலன்கள், மற்ற நோய்களின் தாக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், அயற்சி போன்றவற்றால் நோயின் தாக்கம் வேறுபடும்.

நோயின் அறிகுறிகள் 

** இந்நோயானது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது. ஒன்று தீவிர நிலை, மற்றொன்று கிளாசிக்கல் நிலை

** கோழிகளின் 12 வார வயதில் கோழிகளுக்கு கால் வலிப்பு ஏற்படுவது இந்நோயின் அறிகுறியாகும்.

** தீவிர நோய் நிலையில் கோழிகளின் உள் உறுப்புகளில் புற்று நோய்க் கட்டிகள் ஏற்படும்.

** பாதிக்கப்பட்ட கோழிகள் சோர்ந்து, இரத்த சோகை, பசியின்மை, எடை குறைதல், கழிச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

** நான்கு வார வயதிலிருந்து இளங்கோழிகள் (பெரும்பான்மையான கோழிகள் 6-10 வாரம்) இந்நோயினால் பொதுவாக பாதிக்கப்படுவதுடன், இறப்பு விகிதம் 60% மேல் இருக்கும்.

** கிளாசிக்கல் நிலையில் 12 வார வயதுக்கு மேல் உள்ள கோழிகளின் நரம்புகளில் நோய் அறிகுறிகள் ஏற்பட்டு இறப்பு விகிதம் இவற்றில் 10-30% வரை ஏற்படும்.

** இந்நோயால் கோழிகள் நடக்க முடியாமை, நொண்டுதல், இறக்கைகள் பாதி அல்லது முழு வலிப்பு நிலை ஏற்படுவதால் அவற்றால் நிற்க முடியாது.

** மேரக்ஸ் நோயின் தற்காலிக வலிப்பு நிலையினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் ஒரு கால் முன்னோக்கியும் மற்றோரு கால் பின்னோக்கியும் இருக்கும்.

** வலிப்பின் காரணமாகக் கோழிகளின் கால்களும் இறக்கைகளும் நீட்டிக்கொண்டு இருக்கும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு கழுத்து திருப்பிக் கொண்டு இருப்பதுடன், வேகஸ் நரம்பு பாதிக்கப்பட்டு இரைப்பை பாதிக்கப்படும்.

** ஒரு கண் அல்லது இரண்டு கண்கள் பாதிக்கப்படுவதால் கோழிகளில் ஒரு கண் பார்வை அல்லது இரண்டு கண்களின் பார்வையும் பறிபோய் விடும்.

நோய்த் தடுப்பு முறைகள்

** தடுப்பூசி அளிப்பது மேரக்ஸ் நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிக்கனமான வழிமுறையாகும். தடுப்பூசி அளித்து 7 நாட்கள் கழித்து நோய்க்கான எதிர்ப்பு சக்தி கோழிகளில் உருவாகும்.

click me!