புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பயறு வகைகள் சாகுபடியில் 90 சதவீதம் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையும், மண்வளமும் உளுந்து பயிர் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.
ரகங்கள்:
உளுந்துப் பயிரில் வன்பன் 3, வம்பன் 4, வம்பன் (பிஜி) 5, வம்பன் (பிஜி) 6, வம்பன்(பிஜி) 7, டிடி 9 ஆகிய ரகங்கள் உள்ளன.
பருவம்:
கோடைப்பருவத்தில் வம்பன் 5, வம்பன் 6, டிடி 9 பயிரிடலாம். ஆடிப்பட்டத்தில் (ஜூன்,ஆகஸ்ட்) வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6 பயிரிடலாம்.
விதையளவு:
ஒரு ஏக்கருக்கு 8 கிலோ (ஹெக்டேருக்கு 20 கிலோ).
விதை நேர்த்தி:
விதை மூலம் பரவும் பூஞ்சான் நோய்களை கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கிலோ விதையில் கார்பண்டசிம் 20 கிராம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடெர்மோ விரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.
உயிர் உர விதை நேர்த்தி:
வேர் முடிச்சுகள் காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை பூமியில் நிலை நிறுத்தும் பொருட்டு ஒரு ஹெக்டேருக்கு தேவையான 20 கிலோ விதைக்கு 3 பொட்டலங்கள் (200 கிராம்) ரைசோபியத்தை 750 மில்லி, ஆறிய அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதைப்புக்கு 30 நிமிடத்துக்கு முன்பு கலந்தும், அதனை நிழலில் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும். பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தையும் கலந்து விதைக்கலாம்.
விதைப்பு:
வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்குச் செடி 10 செ.மீ. இருக்கும்படி, இதற்கான விதைப்புக் கருவியை பயன்படுத்தி விதைப்பு செய்வதால், பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். வேளாண் மையங்களில் தேவையான விதைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
நீர் நிர்வாகம்:
விதைத்த நாளில் முதல் தண்ணீரும், 3ஆவது நாளில் இரண்டாவது தண்ணீரும் பாய்ச்சுவதோடு, தொடர்ந்து மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாள்கள் இடை வெளியிலும், பூக்கும் பருவம் மற்றும் விதை பிடிக்கும் தருணங்களிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
களைக்கட்டுப்பாடு:
ஒரு ஹெக்டேருக்கு 2 லிட்டர் புளுகுளோரலின் அல்லது பெண்டிமெத்திலின் களைக்கொல்லியை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3 நாள்களுக்குள் தெளித்து களையை கட்டுப்படுத்தலாம். களைக்கொள்ளியை நிலத்தில் ஈரம் இருக்கும் போது பயன்படுத்த வேண்டும், தெளித்த மூன்று நாள்களுக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரம் இடுதல்:
ஹெக்டருக்கு 12.5 டன் தொழு உரமும், பாஸ்போபாக்டீரியா 10 பொட்டலங்களை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
மண் மாதிரி பரிசோதனை முடிவின்படி அல்லது பொது சிபாரிசாக, இறவை பயிருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்தை இட வேண்டும். தேவையெனில் ஜிப்சம் 110 கிலோ இடுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறவும், திரட்சியான காய்கள் பெறவும் 2 சதவீதம் டிஏபி கரைசலை விதைப்பு செய்த 25ஆவது நாள் (பூக்கும் பருவம்) மற்றும் 15 நாள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும் போது இக்கரைசலை தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
நல்ல கோடை உழவு, வயல் வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூச்சிநோய் எதிர்ப்பு திறன் கொண்ட விதை ரகங்களை பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைத்தல், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை ஒழித்தல் வேண்டும்.
அறுவடை:
விதைப்பு செய்த 65 முதல் 75 நாள்களுக்குள் செடிகளில் உள்ள காய்கள் நன்கு முற்றி காய்ந்தவுடன் செடியைப் பிடுங்கி காய்களை பிரித்தெடுத்து சுமார் 10 சதவீதம் ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்.
பயறுவகையை இளம் வெயிலில் உலர்த்தி மருந்து தெளிக்காமல் சேமித்து வைப்பதோடு, தேவையெனில் உளுந்தை உடைத்து சேமித்து வைத்தால் பூச்சிகளின் சேதாரம் இருக்காது.
உளுந்து பயறு வகைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மிகக்குறைந்த செலவில், குறைந்த நீருடன், குறுகிய காலத்தில் அதிகப்படியான லாபம் தரும் என்பதால், மேற்கூறிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உளுந்து பயிரிட்டு விவசாயிகள் நன்மை பெறலாம்.