நாற்றங்கால் அமைத்து துவரையை நடவு செய்தால் லாபம் இரட்டிப்பாகும்…

 |  First Published Mar 28, 2017, 12:57 PM IST
If the planting of nursery setting tuvaraiyai Non encore



தமிழகத்தின் தாவர புரதத் தேவை பத்து லட்சம் மெட்ரிக் டன்கள் என்றால் நம்புவீர்களா? ஆனால், அதான் உண்மை.

சராசரி உற்பத்தி என்னமோ 2 லட்சம் மெட்ரிக் டன்கள் தான்.

Latest Videos

undefined

புரதச் சத்து அளிப்பதில் பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயறு வகைகளில் துவரை முக்கிய உணவுப் பயிராகும். இதை விவசாயிகள் ஊடுபயிராகவோ, வரப்பு ஓரங்களிலோ பயிர்செய்து வருகின்றனர்.

துவரையைத் தனியாகப் பயிர் செய்து, அதிக பலன் பெற்று உற்பத்தியை அதிகரிக்க இந்த தொழில்நுட்பம் கைக்கொடுக்கும்.

அதன்படி துவரையை நாற்றங்கால் அமைத்து பின்பு நடவு செய்யலாம்.

இம்முறை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரகம்:

கோ.ஆர்.ஜி-7 என்ற துவரை ரகம் நடுத்தர வயது உடையது. 135 முதல் 140 நாள்களில் பலன் அளிக்கக் கூடியது.

விதை அளவு:

ஒரு ஏக்கர் நடவு செய்ய,ஒரு கிலோ விதை போதுமானது. கால்சியம் குளோரைடு 20 கிராம் வீதம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து விதைகளை ஒருமணி நேரம் ஊற வைத்து, பின்னர் 7 மணி நேரம் நிழலில் காயவைத்து, டிரைக்கோ டெர்மா விரிடி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்பு ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரிப்பு:

நாற்றங்கால் பாலித்தீன் பாக்கெட்டுகளில் தயார் செய்ய வேண்டும். மணல் மற்றும் நன்கு மக்கிய தென்னை நார் கம்போஸ்ட் கொண்டு,பாலித்தீன் பைகளை நிரப்ப வேண்டும். 

இந்த பைகளில் நீர் தேங்காமல் இருக்க இரு துளைகள் இருக்க வேண்டும். நாற்றுகள் நடுவதற்கு 25 முதல் 30 நாள்களில் தயாராகி விடும். நாற்று விட்டு நடுவதன் மூலம், மகசூல் 12 சதவீதம் அதிகமாக பெற முடியும்.

நடவுமுறை:

நடவு வயலில் கடப்பாறை கொண்டு துளை போட வேண்டும். வரிசைக்கு வரிசை 6 அடியும், செடிக்கு செடி 3 அடியும் விட்டு நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 2420 கன்றுகள் தேவைப்படும்.

அதுவே வரிசைக்கு வரிசை 5 அடியும்,செடிக்கு செடி 3 அடியும் விட்டு நடவு செய்தால், ஏக்கருக்கு 2904 கன்றுகள் தேவைப்படும். நடவு செய்யும் போது குழியில் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஒரு குழிக்கு இரண்டு நாற்றுகள் நட வேண்டும். ஒரு நாற்று நன்கு வளர்ந்த பிறகு மற்றொன்றைப் பிடுங்கி விட வேண்டும்.

நீர்ப்பாசனம்:

அதிக அளவு நீர் தேங்கக் கூடாது.நடவுப் பருவம், பூக்கும் பருவம், பிஞ்சுவிடும் பருவம் ஆகிய பருவங்களில் கண்டிப்பாக நீர் பாய்ச்ச வேண்டும். நுண்ணீர் பாசனம்,தெளிப்பு நீர் கருவி அல்லது மழைத் தூவான் பயன்படுத்தி பாசனம் செய்யலாம்.

மண் அணைத்தல்:

நடவு செய்த 20 முதல் 30 நாள்கள் கழித்து மண் அணைக்க வேண்டும். கைக்களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

உரமிடுதல்:

இறவைப் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ தழைச் சத்து,50 கிலோ மணிச்சத்து,25 கிலோ சாம்பல் சத்து, 20 கிலோ கந்தகச் சத்து இடுதல் வேண்டும். மணிச் சத்தை சூப்பர் பாஸ்பேட் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக இடவேண்டும். இறவை பயிருக்கு,ஒரு ஹெக்டேருக்கு 110 கிலோ ஜிப்சம் இடலாம்.

நுனி கிள்ளுதல்:

நடவு செய்த 20 முதல் 30 நாள்கள் கழித்து நுனியைக் கிள்ள வேண்டும். இதனால் அதிக பக்கக் கிளைகள் விட்டு அதிக பூக்கள் மற்றும் காய்கள் பிடிக்கும்.

இலைவழி நுண்ணூட்டம்:

நடவு செய்த 30 நாள்கள் கழித்து, 15 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை டி.ஏ.பி. கரைசல் 2 சதவீதம் தெளிக்க வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காய்கள் நன்கு திரட்சியாப் பிடிக்கும். மணிகளில் எடையும் அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு:

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதார சேதநிலை அறிந்து பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும். இனக் கவர்ச்சிப் பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளை அழிக்க வேண்டும்.

காய்த் துளைப்பான் தாக்குதல் தென்பட்டால் ஹெனிக்கோவெர்பா அல்லது என்.பி.வி. கரைசல் தெளிக்கலாம் அல்லது இண்டாக்சிகார்ப்-0.3 மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை:

நடவு முறையில் ஏக்கருக்கு 1000 கிலோ என்ற அளவில் மகசூல் கிடைக்கும். ஹெக்டேருக்கு 2500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். காய்கள் 80 சதவீதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுத்து கட்டி,பின்பு வெயிலில் காயவைத்து மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.

இந்த முறையில் கோ.ஆர்.ஜி.-7 துவரையை நாற்றங்கால் அமைத்து நடவு செய்தால் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம்.

click me!