கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு அவற்றின் அளவை சமப்படுத்த வேண்டும். மக்க வைக்கும் இடம் சற்று உயர்வாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும்.
கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச் சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.
கழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான பயோமினரலைசரை ஒரு டன் கழிவுக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம்.
திடக்கழிவு குவியலில் தேவையான அளவுக்கு உயிர் வாயு இருக்க வேண்டும். குவியலை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். மக்கும் நிகழ்வு முடிந்த பின் உரத்தின் அளவு குறைந்து, கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், துகளின் அளவு குறைந்தும் இருக்கும்.
இதனையடுத்து மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.
உரத்தை செறிவூட்ட
அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதம்) ஆகியவற்றை ஒரு டன் மட்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.
இதை 20 நாள்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட. துரிதப்படுத்தப்பட்ட மக்கிய உரத்தில் சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தின் நிலை அதிகமாவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும் இருக்கும்.