வான்கோழிகளை செயற்கை முறையில் அடைகாக்கும் முறை:
1.. குஞ்சு பொரிக்கும் கருவி மூலம் அடைக்கு வைத்தல்:
வான்கோழிப் பண்ணைகளில் கருவுற்ற முட்டைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 3 முறையாவது சேகரிக்க வேண்டும். முட்டைகளை சேகரிக்கும்பழுது அழுக்கான முட்டை, உடைந்த முட்டை போன்றவற்றை குஞ்சு பொரிக்கும் கருவிகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
முட்டைகளை குஞ்சுபொரிக்கும் கருவியில் வைப்பதற்கு முன் அவற்றை பரிந்துரைக்கப்பட்டகிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். சேகரித்த கருவுற்ற முட்டைகளை சுமார் 7 நாட்கள் வரை அறை வெப்ப நிலையில் குளிர்ச்சியான இடத்தில் வைத்த பிறகு குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம்.
நாட்டுக்கோழிகளில் குறைந்த அளவு வான்கோழி முட்டைகளை மட்டும்தான் வைத்து குஞ்சு பொரிக்க முடியும். பெரிய அளவில் 200 முதல் 300 வான்கோழி முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்க, குஞ்சு பொரிக்கும் கருவி கட்டாயம் அவசியம். அதிக அளவு முட்டைகளை நாட்டுக்கோழிகளில் வைத்து குஞ்சு பொரிக்க இயலாது.
குஞ்சு பொரிக்கும் கருவி என்பது வான்கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கும் கருவியில் வைத்து செயற்கையாக குஞ்சு பொரிப்பதாகும். இதை பயன்படுத்துதவற்கு தகுந்த பயிற்சி மற்றும் கவனம் தேவை. இது மின்சாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரமாகும்.
குஞ்சு பொரிக்கும் கருவியின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சீராக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கருவியினுள் ஒரு வெப்பநிலை மானியும், ஈரப்பதமானியும் இருக்கும். கருவியினுள் வெப்பநிலை குறைந்தால், உளளே உள்ள மின்சார பல்பு உடனே எரியும். கருவியின் வெப்பநிலை அதிகமானால் மின்சார பல்பு அணைந்து உள்ளே உடனே காற்றாடி சுற்றும்.
குஞ்சுப்பொரிக்கும் கருவியில் இருக்கும் செட்டர் மற்றும் ஹேட்சரில் வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளை பின்வருமாறு அமைக்க வேண்டும்:
செட்டரில் முட்டைகளை அடுக்கி வைத்து முதல் 26 நாட்கள் வரை முட்டைகள் திருப்பப்படுகிறது. பொதுவாக தாய் வான்கோழி, தன் முட்டைகளை மூக்கு அலகாலும், கால் விரல்களாலும் திருப்பிவிட்டு, எல்லா முட்டைகளுக்கும் ஒரே சீராக இறக்கையின் வெப்பம் கிடைக்கச் செய்கிறது. இதே போன்று குஞ்சு பொரிக்கும் கருவியில் உள்ள முட்டைகள் அனைத்திற்கும் வெப்பம் கிடைக்க முட்டைகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பப்படுகிறது.
முட்டைகள் திருப்புவது மின்சாரம் இல்லாதபோது நின்றுவிட்டால் அனைத்து முட்டைகளும் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழந்து கெட்டுவிடும். ஆகையால் இதற்கு ஒரு ஜெனரேட்டர் பொருத்தி ஆட்டோமேட்டிக் குஞ்சு பொரிக்கும் கருவி வாங்கினால் நன்றாக இருக்கும். 27 முதல் 28 நாட்கள் வரை முட்டைகள் ஹேட்சரில் வைக்க வேண்டும்.
இந்த நாட்களில் முட்டைகளை திருப்ப கூடாது. ஏனென்றால் கடைசி இரண்டு நாட்களில் குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கிவிடும். பெரிய அளவில் வான்கோழிப் பண்ணை வைக்க முயலுபவர்கள் ஹேட்சரி யூனிட் ஒன்று வாங்கி வைத்து குஞ்சு பொரிக்கலாம்.