பேரீச்சை மூலம் இலாபம் பெறுவது எப்படி?

 |  First Published Dec 2, 2016, 2:55 PM IST



பலரும் பேரிச்சை என்பது  ஒரு பாலைவன பயிர் என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது முழுமையான உண்மை அல்ல. இந்தியாவிலும் பேரிச்சை குறிப்பிட்ட அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.  குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏராளமான விவசாயிகளால்  பயிரிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சில விவசாயிகளால் பேரிச்சை பயிரிடப்பட்டு வருகிறது. உரிய முறையில் பேரிச்சையை பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

பேரிச்சைக்கு உலகளவில் இந்தியாதான் மிகப்பெரிய சந்தை.  உலகளவில் உற்பத்தியாகும் பேரிச்சையில் சுமார் 40 சதவீதம் இந்தியாவில் விற்பனையாகிறது. அந்த அளவுக்கு பேரிச்சை நம்நாட்டு மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. பேரிச்சை பழத்தில் அதிக இரும்பு சத்து உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் டாக்டர்கள் கூட பேரிச்சம்பழம் சாப்பிடும் படி நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கும்  பேரிச்சை ஏற்ற பழமாகும். கர்ப்பிணிப்பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்,  ரத்த சோகை உள்ளவர்களுக்கும் சத்துக்களை அதிகரிக்கச்செய்வதற்காக பேரிச்சை சாப்பிட கொடுக்கப்படுகிறது.  இத்தகைய காரணங்களால் பேரிச்சைக்கான தேவை ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. எனவே பேரிச்சை பயிரிடுவது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகும்.

பேரிச்சை வளர்ப்பு மிகவும் சுலபமானது. கடும் வறட்சியைகூட தாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. எல்லா வகை மண்ணிலும் இது வளரும். ஒரு ஏக்கருக்கு 100 மரம் வரை வைக்கலாம். குறைந்த அளவு பராமரிப்பே போதுமானது. தேவைப்பட்டால் உரம் போடலாம்.  உரம் போடாமல் இருந்தாலும் பேரிச்சை நன்றாக வளரக்கூடிய ஒரு பயிர். கால்நடையாலும், பூச்சிகளாலும் பாதிப்பு கிடையாது. சொட்டு நீர் பாசனம் மூலமாகவும் சிலர்  இதை வளர்த்து நல்ல விளைச்சலை காண்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை திசு வளர்ப்பு முறையில் பேரிச்சை கன்று வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது என்பதால் திசு வளர்ப்பு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு வேளாண் பல்கலை கழகங்கள் வழங்கி வருகின்றன.  தனியார் அமைப்புகளிடமிருந்தும் கிடைக்கின்றன.

ஒரு பேரிச்சை கன்றின் விலை ரூ.3500 முதல் 4000த்திற்கு கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 100 கன்றுகள்  வரை நடலாம். 100 கன்றுகளுக்கு சுமார் ரூ 3 .5 லட்சம் செலவாகும். சொட்டுநீர் பாசன குழாய் அமைப்பதற்கான செலவு ரூ.25 ஆயிரம் ஆகும்.

இது ஆரம்ப கட்ட முதலீடு. செயற்கை உரம் தேவையில்லை. இயற்கை உரமே இதற்கு போதுமானது. வருடத்திற்கு இந்த இயற்கை உரத்திற்கான செலவு ரூ.30ஆயிரம் வரை ஆகலாம்.
பாலைவனத்தில் விளையும் பேரிச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் நமது மண்ணில் விளையும் பேரிச்சைக்கு கண்டிப்பாக தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சினால் குறைவான தண்ணீரே செலவாகும்.

கன்றுகள் நட தொடங்கி மூன்றாவது ஆண்டில் காய்க்கத்தொடங்கி விடும். ஒரு மரத்திற்கு 5 முதல் 8 குலைகள் வரை வரும். ஒரு குலையில் 10 கிலோ பழம் என்றால் மொத்தம் ஒரு மரத்திற்கு 80 கிலோ கிடைக்கும். ஏக்கருக்கு சுமார் 5 ஆயிரம் கிலோ வரை கிடைக்கும்.

ரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட மொத்தமாக 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலி ஆட்கள் போன்றவற்றுக்கான செலவு போக வருடத்திற்கு 1 ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். சுமார் 80 முதல் 100 வருடங்கள் வரை விளைச்சல் இருக்கும்.

ஒரு முறை பயிரிட்டுவிட்டால் தலைமுறை கடந்தும் வருமானத்தை தரும் பயிராக பேரிச்சை இருப்பதால் இதை வளர்த்து நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.
தென்னை மரங்கள் வளர்ப்பவர்களை காட்டிலும், பேரிச்சை வளர்ப்பவர்கள் நன்றாக சம்பாதித்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால் பேரிச்சை வளர்ப்பதற்கான ஆர்வம் இன்னும் பரவலாகவில்லை.

வளர்ந்த பேரிச்சை பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கிச் செல்வதால் ஸ்டாக் வைக்க வேண்டிய அவசியமோ, விலை குறைந்துவிடும் என்ற அச்சமோ ஏற்படுவதில்லை. ஏற்றுமதி செய்ய நினைத்தால் வெளிநாடுகளில் ஆர்டர் பெற்று பேரிச்சையை  ஏற்றுமதியும் செய்யலாம். அல்லது ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்யலாம்.

click me!