இரகங்கள்
கோ 1 (இறவை), கோ 2, கோ (சோயா) 3
வயது:
சோயா மொச்சை 90 நாட்களில் வளர்ந்து பயனளிக்கக்கூடியது, 40 நாட்களில் 50 சதம் பூக்கும் திறன் கொண்டது. நெல்லில் தரிசாக பயிரிட கோ 1, கோ ஏடிடி1 ஏற்றது.
நிலம் தயாரித்தல்
முன்செய் நேர்த்தி நிலத்தை நன்கு உழுதபின், பாத்தியாகவும், வாய்க்காலாகவும் பிரிக்கவும்.
விதை அளவு
கோ 1, கோ (சோயா) 3 - 80 கிலோ/எக்டர், மிதமான பயிர் எண்ணிக்கை – 6 இலட்சத்து 66 ஆயிரம் / எக்டர்
கோ 2 - (மானாவாரி) தனிப்பயிர் 60-70 கிலோ/ எக்டர், ஊடுபயிர் 25 கிலோ/ எக்டர்
விதைநேர்த்தி:
விதையிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நுனிக்கருகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.
நுண்ணுயிர் கலத்தல்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் (COS1) 3 பாக்கெட் (600 கிராம் / எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் / எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம் / எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம் / எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.
பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்குஉலர்த்த வேண்டும்
விதைத்தல்:
விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் 30 x 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரநிர்வாகம்
ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும். விதைத்த 40வது நாளில் இலைமூலம் 2 சதவீதம் டிஏபி கரைசல், தெளிப்பதன் மூலமும், சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் (50 கிராம்/ 500 லி/எக்டர்) இலை மூலம் விதைத்த 30வது மற்றும் 40வது நாளில் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
நீர் நிர்வாகம்:
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண் மற்றும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்கவேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை.
வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சசை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.
களை மேலாண்மை
இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.
முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
ஊடுபயிர்: கரும்பில் ஊடுபயிராக சாகுபடி செய்ய சோயா மொச்சை உகந்த பயிராகும். சோயாமொச்சையைத் தனிப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். மேலும் இப்பயிரை வாழை மரவள்ளி, பருத்தி, மஞ்சள், தென்னை ஆகிய பயிர்களிலும் ஊடுபயிராகப் பயிரிடலாம்
அறுவடை:
இலைகள் பழுத்து உதிர்ந்தவுடன் நிலமட்டத்தில் அறுத்துச் செடிகளைக் காயவைத்து பின் தாம்பு கட்டி மணிகளைப் பிரித்துத் தூற்றிச் சுத்தம் செய்ய வேண்டும்.
சோயாவை நெல் தரிசாக ஜனவரி மாதம் முதல் மார்ச் நடுவரையிலும் பயிர் செய்யலாம். எக்டரக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும்.