தட்டை பயிர் சாகுபடியில் நிலம் தயாரித்தல்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்
தட்டை பயிர் சாகுபடியில் விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடர்மா விரிடி 4 கிராம் அல்லது 1 கிராம் சூடோமோனஸ் உடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைநேர்த்தி செய்யவேண்டும்.
பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் பாக்டீரியாவுடன் நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவேளை வேண்டும்.
COC 10 எனும் மேம்படுத்தப்பட்ட ரைசோபிய ராசி விளைச்சலை அதிகரிக்க உகந்ததாகும் 3 பாக்கெட் (600 கிராம், எக்) ரைசோபியம் COC 10 மற்றும் 3 பாக்கெட் (600 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
விதை நேர்த்தி செய்யவில்லையென்றால், 10 பாக்கெட் ரைசோபியவுடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
அரிசிக் கஞ்சியானது ஒட்டும் திரவமாகப்பயன்படுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும். கடின விதை நேர்த்தி: தட்டைப்பயிர் விதைகளை மூன்றுக்கு ஒன்று என்ற அளவில் 100 பிபிஎம் (10 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசலில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
தட்டை பயிர் சாகுபடியில் உரமிடுதல்
அடியுரமாக மானாவாரிப் பயிருக்கு எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும்.
இறவைப் பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.அடியுரமாக 25 கிலோ ஜிங்க்சல்பேட் இட வேண்டும்.