மலை வேம்பு மிக வேகமாக வளரக் கூடிய மர வகையாகும். ஃபிளைவுட், மரச் சாமான்கள், தீக்குச்சிகள் என பரவலான பயன்பாடு கொண்ட வணிக ரீதியாக வளர்க்கக் கூடிய மரம் மலை வேம்பு.
மலை வேம்பு மரம் பக்கக் கிளைகள் இல்லாமல் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வளரக் கூடியது. ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரியின் தேவையைத் தணிக்கப் பயன்படும் மரம்.
பத்தடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு சுமார் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்புக்குத் தேவைப்படும் தண்ணீரை வைத்து ஐந்து ஏக்கர் மலை வேம்பு சாகுபடி செய்யலாம்.
நான்கு வருடம் கழித்து இந்த 400 மரங்களில் 300 மரங்களை வெட்டி விட்டு மீதமுள்ள 100 மரங்களை மட்டும் அப்படியே விட்டால் போதும். நாம் செய்த முதலீட்டின் பெரும்பகுதியை இந்த 300 மரங்கள் மூலம் திரும்பப் பெற்று விடலாம்.
அவை வளரப் போதுமான இடம் கிடைக்கும். இப்படி வெட்டாமல் விடப்படும் மரங்கள் 10 ஆண்டுகளில் சுமார் 80 அடி உயரமும், 4 அடி சுற்றளவும் வளரக் கூடியவை.
கர்நாடகாவில் உள்ள ஹன்ஸ்பிளை என்ற பிளைவுட் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மரங்கள் ரூ 7 இலட்சம் தரும் என 1995-இல் கணக்கிட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட கணக்கு அது. பிளைவுட் தேவையும், விலையும் அன்றை விட இன்று பல மடங்கு பெருகியுள்ளது.
18 ஆண்டுகளுக்கு 8% விலை ஏற்றம் என வைத்துக் கொண்டால் கூட, இந்த ரூ 27 இலட்சம் ஆகிறது. 14 ஆண்டுகளில் வெட்டாமல் விட்ட 100 மரங்கள் தரும் வருமானம் இது.
கடந்த ஏப்ரல் மாதம் ஒரு இதழில் வந்த ஒரு கட்டுரை ஒன்றில் ஒரு ஏக்கரில் மலை வேம்பு பயிருடுவதன் மூலம் 9 ஆண்டுகளில் ரூ 20 இலட்சம் ஈட்டலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
அந்தக் கணக்கை விடவும் கூடுதலாக ஈட்டும் சாத்தியம் மலை வேம்புக்கு உண்டு.