மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிகள்…

First Published Sep 22, 2017, 12:56 PM IST
Highlights
how to control insects in turmeric


 

 

தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது.

 

பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய்கள் மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

 

1.. இலைப்புள்ளி நோய்:

 

கொலிட்ரோடிரைக்கம் கேப்சைசி என்ற பூஞ்சணத்தால் உருவாக்கப்படும் இலைப்புள்ளி நோய், தென் இந்தியப் பகுதிகளில் தீவிரமாகக் காணப்படுகிறது.

 

பயிர் நட்ட 40-45 நாள்களுக்குப் பிறகு தோன்றும் இந்த நோய், ஈரமான பருவ நிலையில் தீவிரமாகப் பரவுகிறது.

 

கருமை நிற வளையங்களை உள்புறமாகக் கொண்ட பழுப்பு நிற புள்ளிகள், இலையின் மேல் பரப்பில் காணப்படும். இளம் மற்றும் முதிர்ச்சியடைந்த செடிகளில் வெவ்வேறு அளவுகளில் புள்ளிகள் காணப்படும். முதலில் சாம்பல் நிற உள்புறத்தைக் கொண்ட நீள வடிவப் புள்ளிகளாகத் தோன்றும்.

 

ஓர் இலையின் எண்ணற்ற புள்ளிகள் தோன்றி நோயின் தீவிரம் அதிமாகும் போது புள்ளிகள் விரிந்து இலையின் முழுப் பரப்பையும் கரும்புள்ளிகளாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.

 

தீவிரமாகத் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து வாடிவிடுகின்றன.மழைக் காலங்களில் இந்த நோய் தீவிரமாகப் பரவுகிறது. இந்த நோய் கிழங்குகளின் மகசூலில் 60 சதம் வரை இழப்பை ஏற்படுத்துகிறது.

 

2.. செந்நிற இலைக் கருகல் நோய்:

 

செந்நிற இலைக் கருகள் நோயின் தாக்கம் தற்சமயம் மஞ்சள் சாகுபடி செய்துள்ள இடங்களில் பெருமளவு காணப்படுகிறது.

 

இந்த நோய் டாப்பரினா மேக்கிலன்ஸ் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் முதலில் காணப்படும்.

 

இலை ஓரங்களில் பழுப்பு நிறத்தில் காயத் தொடங்கும். பின்னர் இலையின் மைய நரம்பு நோக்கி பரவும், தீவிரமாகத் தாக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி, சிறுத்துக் காணப்படும். இதனால், மஞ்சளின் தரம் பெருமளவு பாதிக்கும்.

 

இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோய்களை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி எரிக்கவும். சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை 0.5 சதம் கரைசலை நடவுக்கு பின் 45 நாள்கள் கழித்து 30 நாள்கள் இடைவெளியில் மூன்று (அ) நான்கு முறை இலைகளின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும்.

 

ரசாயன பூஞ்சாண கொல்லிகளான கார்பண்டாசித்துடன் மேங்கோசெப் 2 கிராம் (அ) கேப்டானுடன் ஹெக்ஸகொனசோல் 2 கிராம் (அ) பென்கொனசோல் 1.5 மில்லி (அ) குளோரோதலோனில் 2 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒட்டும் திரவம் சேர்த்து இலைகளின் மேல் தெளித்து இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

 

3.. கிழங்கு அழுகல் நோய்:

 

கிழங்கு அழுகல் நோய் பித்தியம் அபானிடெர்மேட்டம் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் இலை, தண்டு, கரணைகளில் அதிகளவு காணப்படும்.

 

முதலில் இந்த நோய் தாக்கிய இலை ஒரங்கள் காய்ந்து பின்பு நடு நரம்பு காய்ந்துவிடும். செடி மேலிருந்து கீழாக காயத் தொடங்கும். தரையை ஓட்டிய தண்டுப் பகுதி வலுவிழந்து காணப்படும்.

 

மஞ்சள் கிழங்கு அழுகி உருக்குலைந்து பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால், அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.

 

ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா பூஞ்சாணம் துகள் கலவையை 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம்.

 

சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவையை 0.5 சதம் கரைசலை 30 நாள்கள் இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை செடியின் தண்டுப் பகுதி மற்றும் செடியை சுற்றியுள்ள மண் நனையும் படி ஊற்றுவதால் கிழங்கு அழுகல் நோய் பெருமளவு குறையும்.

 

இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவதால் மஞ்சளில் நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.

 

இவ்வாறு செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகம் பெறலாம். மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு.

click me!