பட்டுப்புழுவுடன் மீனை சேர்த்து வளர்ப்பது:
மொசுக்கொட்டைச் செடியின் இலைகள் பட்டுப் புழுக்களின் உணவாகும். வீணான இறந்த பட்டுப்புழுக்கள் இம்முறையில் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. பட்டுப்புழுக் கழிவில் உள்ள அங்கக ஊட்டச்சத்துக்களை குளத்தில் வாழும் மிதவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன.
சராசரி வெப்பநிலை 15 - 320 செல்சியஸ், ஈரப்பதம் 50 - 90% பட்டுப்புழுவிற்கு மொசுக்கட்டை இலைகளை அளித்தபின் அவை உண்ட மீதத்தைக் கழிவுகளுடன் சேர்த்துக் குளத்தில் கொட்டிவிடலாம். இவ்வாறு செய்வதால் அவை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டரில் ஆண்டுக்கு 30 டன்கள் மொசுக்கொட்டை இலைகள் உற்பத்தி செய்யலாம்.
இதில் 16 - 20 டன்கள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றது. 1 ஹெக்டர் பரப்பளவில் பாதி நிலம் மொசுக்கொட்டை சாகுபடிக்கும், மீதப் பகுதியில் குளம் அமைக்கவும் வேண்டும். குளத்தைச் சுற்றி கரையிலும் மேலும் மொசுக்கொட்டையுடன் ஊடுபயிராகவும் காய்கறிகளைப் பயிர் செய்யலாம். இதனால் 3.75 டன்கள் வரை காய்கறிகளைக் கூடுதலாகப் பெறலாம்.
இதே போல் கால்நடையுடன் மீன் வளர்ப்பு, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, கோழியுடன் மீன் வளர்ப்பு, வாத்து மீன் வளர்ப்பு, ஆடு மீன் வளர்ப்பு, முயல் மீன் வளர்ப்பு போன்ற பல முறைகளைப் பின்பற்றலாம்.
இம்முறையில் வாத்து, கோழி, பன்றி மற்றும் கால்நடையின் கழிவுகள் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் மீன்களுக்கான உணவு உரமிடுதலின் செலவு குறைவதோடு பயன்படுத்தும் இடத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். இவ்வாறு கால்நடைகளுடன் மீன் வளர்ப்பு பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக கால்நடை - மீன் வளர்ப்பில் கருதப்படுவது ஊட்டச்சத்துக்கள். குறிப்பாக நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மீன் உணவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் கால்நடை கழிவுகளின் மூலம் கிடைத்துவிடுவதால் செயற்கை உரத்திற்கான தேவை மிகக் குறைவு.
அதோடு விலங்கு / கால்நடை ஆய்வுக்கூடத்தின் கழிவுகள் அசைவ மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவ்வாறு கால்நடை வளர்ப்பு மட்டுமல்லாது அதன் பிற (பதப்படுத்தல்) முறைகளின் கழிவுகளும் மீன்களுக்கு உணவாகின்றன.
குளம் போன்ற (நீர்த்தேக்க) மீன் வளர்ப்பில் குறிப்பிட்ட அளவே கழிவுகளைப் பயன்படுத்த இயலும். ஆதலால் மீன்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர வாய்ப்பில்லை. இவ்வாறு மீன்கள் கழிவுகளை உண்ணும் உயிரியல் முறை வெப்ப நிலையைச் சார்ந்தது. இதற்கான சராசரி வெப்ப நிலை 25 - லிருந்து 320 செல்சியஸிற்குள் இருக்க வேண்டும்.
பருவநிலையைப் பொறுத்து இது மாறுபடலாம். இந்தக் கழிவுகளை நேரடியாக மீன்களுக்கு அளிப்பதைவிட மண்புழு போன்ற உயிரிகளுக்கு உணவாகக் கொடுத்து அப்புழுக்களை மீன்களுக்கு அளித்தால் சிறந்த விலங்குப் புரதம் கிடைக்க ஏதுவாகும். மாமிசக் கழிவுகள், இரத்தம், எலும்புத் துகள்கள் போன்றவையும் சிறந்த உணவுகள்.
இவற்றை அளிப்பதால் ஊனுண்ணி மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இதேபோல் தாவர உண்ணிகளுக்கும், வாத்து களைகள், அசோலா போன்றவை சிறந்ததீனியாகும்.