கரும்பில் நுண்ணூட்டச்சத்து மேலாண்மை செய்வது எப்படி?

 |  First Published Jan 23, 2017, 2:24 PM IST



கரும்பில் பல்வேறு நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் தோன்றலாம். அவற்றைக் கண்டறிந்து நீக்குவதன் மூலம் மகசூல் இழப்பை விவசாயிகள் தடுக்க முடியும்.

மாங்கனீசு சத்துக் குறைபாடு அறிகுறிகள் :

Tap to resize

Latest Videos

கரும்பச்சை அல்லது வெண்ணிறக் கோடுகள் நரம்புகளுக்கிடையே காணப்படும். பொதுவாக இக் கோடுகள் சோகையின் நடுவிலிருந்து ஆரம்பித்து நுனிவரை தெரியும். நரம்புகள் பச்சை நிறத்தில் புலப்படும்.

இலை நரம்பின் இடைப்பகுதிகளில் பழுப்பு நிறத் திட்டுகள் காணப்படும். பழுப்பு நிறத் திட்டுகள் நாளடைவில் கருஞ்சிவப்பாக மாறி பின்னர் கருகிவிடும்.

எனவே மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 10 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இடவேண்டும். கரும்பின் கரணைகளை 1 சதவிகித மாங்கனீசு சல்பேட் (ஒரு லிட்டர் நீரில் 10 கிராம்) கரைசலில் ஊறவைத்து பின்னர் நட வேண்டும். 0.5 சதவிகித மாங்கனீசு சல்பேட் (ஒரு லிட்டர் நீரில் 5 கிராம்) கரைசலை இலை வழியாக 10 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

இரும்புச் சத்து குறைபாடு அறிகுறிகள்:

இளம் தோகைகளில் இளம் பச்சை அல்லது வெண்ணிறக் கோடுகள் முதலில் நரம்புகளுக்கிடையில் ஆரம்பிக்கும். தோகையின் முழு நீளத்துக்கும் இக் கோடுகள் புலப்படும். இலைகள் வெளுத்தும், மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். இலை நரம்புகள் தெளிவாக வெளிர்பச்சை நிறத்துடன் காணப்படும்.

தண்டு மற்றும் வேரின் வளர்ச்சி குன்றிவிடும். இரும்புச் சத்து பற்றாக்குறை இளம் பயிரில் அதிமாக தென்படும். இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும்போது ஏக்கருக்கு 800 கிராம் இரும்பு சல்பேட் மற்றும் 800 கிராம் யூரியாவை 100 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்பு பயிரின் அனைத்து பாகங்களும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் 15 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்கலாம். இரும்புச் சத்து பற்றாக்குறை உள்ள நிலங்களில் ஏக்கருக்கு 40 கிலோ இரும்பு சல்பேட் உரத்தை தொழு உரத்தோடு அடி உரமாக இட வேண்டும்.

துத்தநாகச் சத்து குறைபாடு அறிகுறிகள்:

தோகைகளின் நடு நரம்புக்கும் இலை ஓரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மஞ்சள் பட்டையாக தென்படும். நடு நரம்புகளும், இலை ஓரங்களும் பச்சையாக இருக்கும். சில சமயங்களில் மஞ்சள் நிறப் பகுதியில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இது துத்தநாக குறைபாட்டின்போது ஏற்படும் பூஞ்சாணத் தாக்குதலினால் ஏற்படுகிறது. நாளடைவில் பயிர் வளர்ச்சி குன்றி தண்டின் பருமன் குறைந்து காணப்படும்.

இவ்வாறு உள்ள நிலங்களில் ஒரு ஏக்கருக்கு 15 கிலோ சுத்தநாக சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும். ஒரு கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவையும் 100 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்பு பயிரின் அனைத்து பாகங்களும் நனையும்படி தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 15 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்கலாம்.

போரான் சத்து குறைபாடு அறிகுறிகள்:

போரான் குறைபாடு முதலில் இளம் இலைகளில் தோன்றும். இளம் தளிர்கள் வெளிர்பச்சை அல்லது மஞ்சளாக மாறும், ஆனால் வாடாது. இலைகள் மழுங்கியும், குருத்து நீண்டும் காணப்படும். நுனிக்குருத்து சிலசமயம் இறந்துவிடும். துளிர் இலைகளின் ஓரங்கள் ஒழுங்கற்றும், விரிவடையாமலும் காணப்படும்.

இக் குறைபாடு தீவிரமானால் இளஞ்செடிகள் எளிதில் ஒடிந்து விழுந்துவிடக்கூடிய தடிமனுடனும் அதிக தூர்களுடனும் காணப்படும். தோகைகளின் ஓரங்கள் கிழிக்கப்பட்டதுபோல் தெரியும். தண்டின் கணுக்களுக்கிடையே உள்ள பகுதி தவிட்டு நிறம் கலந்த சிகப்பு நிறமாக மாறிவிடும்.

இச்சத்து குறைபாடு உள்ள நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ போராக்ûஸ அடியுரமாக இட வேண்டும். அறிகுறிகள் தென்பட்டதும் 0.25 சதவிகித போராக்ஸ் (ஒரு லிட்டர் நீரில் 2.5 கிராம்) கரைசலை இலை வழியாக 10 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!