இந்தியாவிலேயே, கரும்பு மகசூலில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் 3 லட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யும் மாவட்டங்களில் மகசூல் குறைவதும் அதனால் குறைந்த லாபம் பெறுவதும் கவலை தரும் செய்தி. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மண் வளம் ஓர் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.
மண் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் மகசூல் ஈட்டும் திறன் அதிகரிக்க முடியுமென்றாலும், இயற்கை எருக்களை விலை கொடுத்து வாங்குவதில் கூடுதல் செலவும், சிரமமும் உள்ளதால், கரும்பு விவசாயிகள் ரசாயன உரத்தினை மட்டும் நம்பி ஊட்டச்சத்து மேலாண்மை செய்கிறார்கள்.
இதனால் மண்ணினுள் அங்கக கரிமச்சத்து குறைகிறது. மேலும், கரும்பு தோகையை எரிப்பதன் மூலம் மண் வளம் பாதிக்கப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பொசுக்கப்படுவதோடு, சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்படுகிறது, என திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் நா.சாத்தையா, உழவியல் நிபுணர் அன்புமணி மற்றும் ஹேமாவதி ஆகியோர் கூறுகின்றனர்.
கரும்புத் தோகைகளை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது விவசாயிகளின் கடமை. இவைகள் விலையில்லா அங்கக உரமாகும். ஆனால், 90 சதவீத கரும்பு விவசாயிகள் பின்விளைவுகள் குறித்து சிந்திக்காமல், தோகைகளை எரித்து விடுகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமிழகத்தில் 30 லட்சம் டன் கரும்பு தோகைகள் எரிக்கப்படுகிறது.
தோகையை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: தாவரக்கழிவுகளான இலை, மரம், புல் மற்றும் தோகையினை எரிப்பதால் 40 சதவீதம் கார்பன்டை-ஆக்ûஸடும், 32 சதவீதம் கார்பன்-மோனாக்ûஸடும், 20 சதவீதம் நச்சுத்தன்மை ஏற்படுத்தக்கூடிய துகள்களும் வெளிப்படுகின்றன. இதன் விளைவாக பூமி வெப்பமயமாக்கலுக்கு காரணகர்த்தாவாக விளங்கும் பசுமை வாயுக்கள் மூலம் பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன. பனிமலைகள் உருகுவது, கடல்நீர் மட்டம் அதிகரிப்பது போன்றவைகள் ஏற்படுகின்றன.
கரும்புத் தோகையை எரிக்கும்போது தோல் வியாதியை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜிக் பாலி அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியாகிறது. மேலும் அமிலத்தன்மை கொண்ட நைட்ரேட், டல்பேட் ஆகியவை காற்றில் கலந்து ஆஸ்துமா, நிமோனியா போன்ற நோய்கள் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கின்றன.
கரும்புத் தோகையை வயலிலேயே எரிப்பதன் மூலம் 600-800 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்பட்டு, வயல் பாழாகிறது. இதனால் மண் கடினமாகி ஊட்டச்சத்து ஆவியாகி, நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் இறந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது.
கரும்புத் தூர்கள் கருகி கட்டையப்பயிர் முளைத்திறன் பாதிக்கப்படுகிறது. மேலும், இரும்புச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
கரும்புத் தோகையை உரமாக்கும் வழிமுறைகள்: ஒரு ஏக்கரில் 4-5 டன்கள் வரை கிடைக்கும் கரும்புத்தோகையில் 0.35 சதவீதம் தழைச்சத்தும், 0.1 சதவீதம் மண் சத்தும், 0.45 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளன. இவை மண்ணின் பொதிகத் தன்மையை பயிருக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதோடு,
நீர் செயல்பாட்டுத்திறன் அதிகரிப்பு மற்றும் நுண்ணுயிர்களின் பல்லுயிர் பெருக்கம் மண்ணை உயிரோட்டமாக வைத்திருக்க உதவும்.
தோகை பரப்புதல்: தோகையை பொடியாக்கக்கூடிய இயந்திரம் டிராக்டர் மூலம் இயங்கக்கூடியதாகும். இதன் விலை ரூ.1.90 லட்சம். இதற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.
இக்கருவி மூலம் கரும்பு அறுவடை செய்த வயலில் தோகையினை பொடியாக்கி விடலாம்.
இதனை அறுவடை செய்த 10 நாள்களுக்குள் செய்துவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தோகைகள் நிலப்போர்வையாக விளங்கி, மண்ணுள் ஈரம்காத்து நுண்ணுயிர்களின் செயல்பாடுகளை அதிகரித்து, பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும்.
பயன்கள்: மண்வளம் பெருகுவதோடு, நுண்ணுயிர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மண்ணின் தன்மை மேம்பாடு, நீர் உறிஞ்சும் மற்றும் காக்கும் திறன் அதிகரிப்பு, களைகள் முளைப்பதை குறைத்து நிலப்போர்வையாக செயல்படும். இதன் மூலம் மண்ணில் ஈரம் காக்கப்படுவதோடு நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது.
பயிர்கள் முளைப்புத்திறன் பாதிக்காமல் நல்ல கிளைப்புகளுடன் வளர்ச்சியும் பெற்று கரும்பு மகசூல் அதிகரிக்கிறது. மண்ணில் கரிமத்தின் அளவினை அதிகரிப்பு செய்வதால் மண் வளம் மேம்பட்டு பயிரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கி அதிக மகசூலும் பெற முடியும்.