இரண்டு பெண் முயல்கள், ஒரு ஆண் முயல் என மூன்று முயல்கள் மூலம் மூன்றே மாதங்களில் “மினி முயல் பண்ணையே’ உருவாகும் என்றால் யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள். ஆனால் அந்நிகழ்வு சாத்தியமானது.
மேலும் வீட்டிலே வளரும் கலர் கலரான, “பொசு பொசு’வென உள்ள இந்த முயல் குட்டிகளால் குழந்தைகள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவசமான மகிழ்ச்சி கிடைப்பதோடு கணிசமான வருமானமும் கிடைக்கிறது என்பது தான் பெரிய விசயம்.
ஆமாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்த சந்தோஷம்.
அந்த மாங்காயை ருசித்தவர் சொல்வதைக் கேளுங்கள்.
“நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்காக இராமநாதபுரத்தில் உள்ள “வீட்டு வளர்ப்பு பறவைகள், பிராணிகள் நிலையத்தில் இரண்டு பெண் முயல்கள் (ஒரு கறுப்பு, ஒரு வெள்ளை), ஒரு ஆண் முயல் என மூன்று முயல்களை வெறும் 900 ரூபாய்க்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வாங்கி வந்தோம். முயல்களை நம்மிடம் தந்த கடைக்காரர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் பெண் முயல்கள் இரண்டும் குட்டிகள் போடும் என்றார்.
கடைக்காரர் சொன்னது போலவே, இரண்டு வாரங்களில் பெண் முயல்கள் இரண்டும் தலா 8 குட்டிகள், 5 குட்டிகள் என 13 மூன்று அழகான குட்டிகளை ஈன்று வீட்டில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதுடன் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
குட்டி முயல்கள் வளர்ந்து வரும் நிலையில், அடுத்த 40 நாட்களில் அந்த தாய் பெண் முயல்கள் மீண்டும் 12 குட்டிகளை ஈன்றது. கறுப்பு நிறம், வெள்ளை நிறம், கோல்டு நிறம், செந்நிறம் என பல வர்ணங்களில் வலம் வரும் இந்த அழகிய முயல்குட்டிகளை நமது இல்லத்தில் பார்க்க வருபவர்கள், ஒரு ஜோடி முயல் குட்டிகள் ரூ.500க்கு பிரியமாக வாங்கிச் செல்கிறார்கள்.
இப்பொழுது நம் வீட்டில் முயல் குட்டிகள் வருமானத்திற்கென “ஒரு உண்டியலே’ வைக்கப்பட்டுள்ளது. பெரிய இடம் வேண்டாம், இதற்கென ஒரு தோட்டம் வேண்டாம்.
வீட்டின் கிணற்றுக்கு அருகிலோ அல்லது சின்னதா காலியிடமோ நமது வீட்டில் இருந்தால் 6X4 என்ற அளவிலோ, 10X5 என்ற அளவிலோ ஒரு மரக்கூடு அமைத்து, முகப்பில் மட்டும் கம்பி வலை பொருத்தினால் போதும்.
மேலும் தாய் முயல்கள் குட்டி ஈன வசதியாக ஒரு துளையிட்ட மண்பானையை அந்த மரக்கூட்டின் ஓரத்தில் (சிறிதளவு சுத்தமான மணல் பரப்பி) வைத்து விட வேண்டும்.
30லிருந்து 40 நாட்களுக்குள் தாய் முயல்கள் தொடர்ச்சியாக குட்டிகளை ஈன்று கொண்டிருக்கும். மேலும் நம் வீட்டில் முயல் வளர்ப்பதற்காக பராமரிப்பு செலவு என்பது பெரியதாக ஒன்றும் இல்லை.
எல்லா அரிசி கடைகளிலும் முயலுக்கு என (கிலோ ரூ.25) தீவனம் விற்கிறார்கள். அத்துடன் காலிபிளவர் இலைகள், கேரட், முட்டைக்கோஸ் இலைகளையும், நல்ல வளர்ச்சியுள்ள புற்களையும் முயல்களுக்கு உணவாகக் கொடுத்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்.
ஆர்வமுள்ள அனைவரும் தங்களது வீட்டிலேயே முயல்களை வளர்க்க முன்வந்தால், நல்ல பொழுதுபோக்கு கிடைப்பதோடு, கணிசமான வருமானமும் கிடைக்கும்.