நல்ல வடிகால் வசதியுள்ள மண் தேவை. களிமண் நிலமும், நீர் அதிகம் தேங்கும் நிலமும் உகந்தது அல்ல. கோடை உழவு செய்வதால் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
நவீன சாகுபடி முறையில் தொடர்ந்து கனரக இயந்திர பயன்பாடு, தொடர் பயிர் சாகுபடி, பாசனம் ஆகியவற்றின் நிலப்பரப்பிலிருந்து 40-50 செ.மீ ஆழத்தில் கடினதட்டு உருவாகி இருக்கிறது.
நிலத்தில் இதனை 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு 50-60 செ.மீ இடைவெளியில் கிழக்கு- மேற்கு, தெற்கு – வடக் காக உழவு செய்வதால் கடின தட்டுப்பகுதி உடைக்கப்படுகிறது. மக்காச்சோளம் மானாவாரியாக ஆடிப்பட்டத்திலும் (ஜூன் – ஜூலை), புரட்டாசி பட்டத்திலும் (செப்டம்பர் – அக்டோபர்) இறவைப் பயிராக தைப்பட்டத்திலும் (ஜனவரி – பிப்ரவரி), சித்திரைப் பட்டத்திலும் (ஏப்ரல் -மே) சாகுபடி செய்யப்படுகிறது.
தொழு உரம், கம்போஸ்ட், மக்கிய தென்னை நார்க்கழிவு, சர்க்கரை ஆலைக்கழிவு இவற்றில் ஏதேனும் ஒன்றை எக்டருக்கு 12.5 டன் அளவில் அடியுரமாக இடவேண்டும். இத்துடன் எக்டருக்கு 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இட வேண்டும்.
விதைப்புக்கு எக்டருக்கு 15 கிலோ வீரிய ஒட்டு ரக விதைகள் தேவைப்படும். பாசனப்பயிருக்கு 60 செ.மீ ஙீ 20 செ.மீ இடைவெளியிலும், மானாவாரி பயிருக்கு 45 செ.மீ ஙீ 20 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். கரிசல் மண்ணில் விதையை ஆழமாக நடக்கூடாது. குறைந்த ஆழத்தில் (2செ.மீ) நடவேண்டும். செம்மண் பூமியில் சற்று ஆழமாக (3 செ.மீ- 4 செ.மீ) நட வேண்டும்.
வரிசை முறையில் விதைப்பு செய்ய விதைப்பு கருவியை பயன்படுத்தலாம். பார்கள் அல்லது ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்து விதைப்பு செய்வது சிறந்த முறை. விதைப்பு செய்த 7-8ம் நாளில் தரமான நாற்றுகளை விட்டு விட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கி விடவேண்டும். வெதுவெதுப்பான சுடுநீரில் விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்வதால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்து பூச்சி தாக்குதலும் குறைகிறது. வீரிய மக்காச்சோள பயிருக்கு பரிந்துரை செய்யப்படும்.
135: 62.5:50 கிலோ / எக்டர் என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இவற்றில் 100 சத மணிச்சத்து, 25 சத தழைச்சத்து, 50 சத சாம்பல் சத்தினை ஒன்பதாவது கணு நிலையிலும் (45ம் நாள்) மேலுரமாக இட வேண்டும். 6வது முதல் 9வது கணு உருவாகும் நிலையில் பயிரின் வளர்ச்சியினைக் காட்டிலும் வேரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
நீரில் கரையும் தன்மையுள்ள 19:19:19 எனும் உரத்தினை 0.5-1.0 (5-10 கிராம்/ லிட்டர்) சதக் கரைசலாக 30ம் நாள், 45ம் நாள் தெளிப்பதால் உரப்பயன்பாட்டுத்திறன் அதிகரித்து விளைச்சல் பெருக்கம் ஏற்படுகிறது. களைகளைக் கட்டுப்படுத்த அட்ரசின் களைக்கொல்லியை எக்டருக்கு 500 கிராம் அளவில் தேவையான அளவு தண்ணீரில் கலந்து தெளிப்பானில் விசிறி நாசியை பயன்படுத்தி விதைப்பு செய்த 3வது நாள் தெளிக்க வேண்டும்.
பின்னர் 40-45 நாளில் களை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிருக்கு 600-700 மி.மீ. தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் நெற்பயிரை அதிக பரப்பளவில் பயிரிடுவதைத் தவிர்த்து மக்காச்சோளம் பயிரிட வேண்டும். இறவை மக்காச்சோள சாகுபடியில் சொட்டுநீர் உரப்பாசன முறையை நடைமுறைப்படுத்துவது சிறந்தது.
மானாவாரி சாகுபடி பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரினை அறுவடை செய்து தெளிப்பு பாசனத்தின் மூலம் வறட்சியான சூழ்நிலையில் 20-30 ஆவது நாளில் பாசனம் செய்வதால் அதிக விளைச்சல் பெறலாம். த.வே.ப.கழகம் உருவாக்கியுள்ள “மக்காச்சோள மேக்சிம்’ எக்டருக்கு 7.5. கிலோ அளவில் 500 லிட்டர் தண்ணீரில் தேவையான, ஒட்டும் திரவம் கலந்து ஆண்மஞ்சரி, மணி உருவாகும் பருவத்தில் தெளிப்பதால் மணிபிடிக்கும் திறன் அதிகரித்து 20 சதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது.
உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, சோயா மொச்சை போன்றவற்றை ஊடு பயிராக பயிரிடலாம். இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்வது, மணிகளை சேமிக்கும் நிலையில் 12 சத ஈரப்பதத்தில் சேமிப்பது மிக அவசியம்.