தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடைய நாற்றுக் குச்சிகள் மூலம் தோட்டத்தை உற்பத்தி செய்யும் முறை...
நாற்றுக்குச்சிகள் 8 முதல் 10 வரை தாய்பாத்தியில் வளர்ந்து அதே சமயத்தில் பென்சில் பருமனுள்ள தேக்கு நாற்றுக்களிலிருந்து தயார் செய்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். தேக்கு நடவு செய்யப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து களைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
சம பகுதியாக இருப்பின் நடவு செய்ய வேண்டிய இடத்தை உழுதுவிடவேண்டும். பின்னர் தென்மேற்கு பருவமழையின் ஆரம்பத்தில் 1 ஏக்கருக்கு 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவுள்ள 1000 குழிகள் எடுக்க வேண்டும்.
குழிகள் நன்கு காய்ந்த பின் மக்கிய 2 கிலோ தொழு உரத்துடன் வண்டல் மண் மற்றும் செம்மண் சமமாக கலந்து குழியில் 95 சதவீதம் நிரப்ப வேண்டு்ம். மழைக்காலம் ஆரம்பித்தும் குழிகளில் உள்ள எருக்கலவை நன்கு ஈரமாகும்.
இந்நிலையில் கடப்பாரையால் குழியின் மையப் பகுதியில் துவாரம் இட்டு அவைகளில் தேக்கு நாற்றுக்குச்சிகளை நட்டு குச்சி சேதமடையாமல் மேல் மண்ணை கொண்டு அணைத்து காற்று புகாமல் இறுக்கமாக கைகளால் கெட்டிப்படுத்த வேண்டும்.
அதே சமயம் நாற்றுக்குச்சிகளின் கழுத்துப் பகுதியும் குழியின் மேல்மட்டமும் தரை மட்டத்திற்கு இருக்குமாறும் குச்சியின் மேல் பகுதி 2செ.மீ. அளவிற்கு தரை மட்டத்திற்கு மேலே இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் குச்சியின் மேல் பகுதியில் மண் மூடிவிட்டால் துளிர்வருவது தடைப்படும்.
நாற்றுக் குச்சிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 15 நாட்களுக்கு போதுமான அளவு நீர் விடவேண்டும். பின்னர் வாரத்திற்கு இருமுறை வீதம் மூன்று மாதம் நீர் விடவேண்டும். மழைபெய்தால் நீர்விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடப்பட்ட நாற்றுக்குச்சிகள் ஏழு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும்.
நாற்றுக்குச்சிகள் ஒன்றுக்கு மேல் துளிர்கள் வருமாயின் திடமான ஒரு துளிரை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை நடவு செய்த இரண்டு மாதம் கழித்து அகற்றிவிடவேண்டும்.
பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செடியை சுற்று 15செ.மீ ஆழம்வரை கொத்தி களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடையும்.