வீடுகளில் உள்ள காலியான இடங்களில் வீட்டுக் கழிவுநீரைப் பயன்படுத்தி காய்கறிகளை செய்வதால் அவற்றின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறையும்.
குடும்பத்துக்கு தேவையான பசுமை நிறைந்த காய்கள், பழங்கள், பூ வகைகள் உடனடியாக இவற்றின் மூலம் கிடைக்கும்.
வீட்டு புறத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைக்க உதவுகிறது. நமக்கு பிடித்த காய்கள், பழவகைகள் கிடைக்கின்றன.
ஆண், பெண் இருபாலரும் தோட்ட வேலை செய்வதால் நல்ல உடற்பயிற்சி கிடைக்கின்றது. அதோடு ஆரோக்கியமான, சுகாதாரமான, இனிமையான, பயனுள்ள பொழுதுபோக்காகவும் அமைகிறது.
வீட்டு தோட்டம் அமைக்கப்படுவதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள சிறு குழந்தைகள், காய்கறி, பழவகைகள், பூ வகைகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பது வீட்டு தோட்டத்தின் முக்கிய பயன்களாகும்.
வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க வீட்டின் பின்புறம், இடது புறம், வலது புறம் உள்ள காலியிடங்களை தேர்வு செய்யலாம். வீட்டின் முன்புறம் அதிக இடமிருந்தால் சிறிய பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட இடம் சதுரமாகவும், செவ்வகமாகவும் இருப்பது நல்லது. தேர்வு செய்த இடங்களை இடம் ஒதுக்கி சின்ன, சின்ன பாத்திகளாகப் பிரிக்க வேண்டும்.
மேலும் நடைபாதை முக்கியமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த நடைபாதையின் மேல் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை வளர்க்கலாம். பாதையின் பக்கவாட்டில் மூங்கில் படலில் கொடி வகை காய்கறிகளை பயிரிடலாம்.
காய்கறித் தோட்ட்த்தின் ஏதாவது ஒரு மூலையில் காய்ந்த இலை, தழை போடுவதற்கு குழி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விரைவாக வளர்ந்து வரும் பயன்தரும் பழ மலர்களான பப்பாளி, வாழை, எலுமிச்சை, மாதுளை வகைகளை வடக்கு புறமாக வளர்ப்பதால் அதனுடைய நிழலால் மற்ற பயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
காய்கறித்தோட்டத்தை சுற்றி வேலி அமைத்து அதில் படரும் கொடி வகை காய்கறிப் பயிர்களான பாகல், கோவைப்பழம், பீர்க்கை போன்ற காய்கறிகளை வளர்க்கலாம்.
ஓரம் மற்றும் உட்பகுதியில் உயர பாத்திகளில் வேர் காய்கறிகளான மரவள்ளிக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, டர்னீப், பீட்ரூட் போன்றவற்றை பயிரிடலாம்.
வீட்டு தோட்ட்த்தில் இடமிருந்தால் 2 உயர் விளைச்சல் தென்னையினை வீட்டின் முன்புறம் அல்லது பின்புறம் நடலாம்.