கோழிகள் கொத்து  கொத்தாக சாக காரணமான பறவை காய்ச்சல் பற்றிய முழு தகவல்கள் இதோ...

 |  First Published Nov 22, 2017, 1:08 PM IST
Here the full information about bird flu that causes chicken to bunch ..



பறவைக் காய்ச்சல்

நோயின்  தன்மை

இது கோழியினங்களின் சுவாச மண்டலத்தைத் தாக்கி, முட்டை உற்பத்தியைக் குறைத்து, 100% வரை இறப்பினை ஏற்படுத்தக்கூடிய வைரஸால் ஏற்படும் நோயாகும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து, மனிதர்களுக்கு இந்த நோய் பரவும்.

நோய்க்கான காரணங்கள்

இந்நோய் இன்புளுயன்சா ஏ வைரஸால் ஏற்படுகிறது.

பறவைக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், மற்றும் இதர உடலிலிருந்து வெளியேறும் திரவங்களில் இந்த வைரஸ் இருக்கும். மேலும் வெப்பம், சூரிய ஒளி, காய்ந்து விடுதல் போன்ற காரணங்களால் இந்த வைரஸ் கொல்லப்படாது. இரசாயன கிருமி நாசினிகளான ஃபார்மால்டிஹடு, சோடியம் ஹைப்போ குளோரைட் போன்றவற்றாலும் கொல்லப்படாது. குறைந்த சுற்றுப்புற வெப்பநிலையில் இந்த வைரஸ் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.

காற்றின் மூலமாகவும், கோழிகளுக்கு இடையே நேரடியாகவும், உயிரற்ற பொருட்கள் (உபகரணங்கள், செருப்புகள், துணிகள், வாகனங்கள்) மூலமாகவும் இந்நோய் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலிலிருந்து வெளியேறும் எல்லா திரவங்கள், எச்சம் போன்றவை கோழிப்பண்ணையிலுள்ள உபகரணங்களை அசுத்தமடையச் செய்து விடுகின்றன.

முட்டைகளின் வழியாக இந்நோய் பரவுவதில்லை.

நோய் அறிகுறிகள் 

குறைவான பாதிப்பினை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல் வைரஸ் கோழிகளின் சுவாச மண்டலம், சீரண மண்டலம், சிறுநீரக மண்டலம், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றின் உறுப்புகளைப் பாதித்து, அவை தொடர்பான நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.

பாதிக்கப்பட்ட கோழிகளில் இருமல், தும்மல், மூச்சு விடும் போது சத்தம் ஏற்படுதல், தீவனம் எடுக்ககாமை, சோர்ந்து காணப்படுதல், முட்டை உற்பத்தி குறைதல், முட்டை ஓடு மெல்லியதாக மாறுதல், கழிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும்.

பாதிக்கப்பட்ட கோழிகளின் தாடி மற்றும் கொண்டை வீங்கிக் காணப்படுதல்

நாசித்துவாரங்களிலிருந்து சளி வடிதல், மேலும் அதிகப்படியாக உமிழ்நீர் சுரத்தல்

தீவிர பறவைக்காய்ச்சல் நோயினை ஏற்படுத்தும் பறவைக்காய்ச்சல் வைரஸ், நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எல்லா உறுப்புகளையும் பெரும்பாலும் பாதித்து, எந்த விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இறப்பினை ஏற்படுத்தும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் செயல்பாடுகளும், சத்தம் எழுப்பதலும் குறைந்து, கோழிப்பண்ணைகள் அமைதியாகக் காணப்படும்.

கோழிகளின் நரம்பு மண்டலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டு கழுத்து மற்றும் தலையில் வலிப்பு, நிற்க முடியாமை, கழுத்துத் திருப்பிக்கொண்டு இருத்தல், உடல் விரைத்துக் காணப்படுதல், அசாதாரணமாக தலையினை வைத்துக் கொண்டு இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் நோய் அறிகுறிகள்

கோழிகளின் பாதத்தில் பொட்டுப் பொட்டாக இரத்தத் திட்டுகள் காணப்படும்.

கோழிகளின் தொடை மற்றும் நெஞ்சுப் பகுதியில் இரத்தத் திட்டுகள் காணப்படும்.

மூச்சுக்குழலின் உட்பகுதி சவ்வில் இரத்தம் கசிந்து காணப்படுதல்

பாதிக்கப்பட்டக் கோழிகளின் உட்புற உறுப்புகளில் இரத்தத்திட்டுகள் காணப்படுதல்

நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் 

கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதால், பறவைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் பண்ணைக்குள் நுழைவதைத் தடுத்து பறவைக்காய்ச்சல் பண்ணையிலுள்ள கோழிகள் நோயினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

தடுப்பூசிகள் அளிப்பதால் நோய் அறிகுறிகள் ஏற்படுவதையும், பாதிக்கப்பட்ட கோழிகளில் இறப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும். மேலும் கோழிகளிலிருந்து பறவைக்காய்ச்சல் வைரஸ் வெளியேறுவதையும் தடுக்கலாம்.

நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த கோழிகள் மற்றும் அவற்றின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்கள் மற்றும் எச்சத்தை முறையாக அப்புறப்படுத்தி, நோய் பாதித்த கோழிப்பண்ணைகள் மற்றும் அவற்றிலுள்ள உபகரணங்களை சோடியம் ஹைப்போகுளோரைட் (5.25%), சோடியம் ஹைட்ராக்சைடு (2%), சோடியம் கார்போனேட் (4%) மற்றும் பீனாலிக் பொருட்களைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

நோய்க்கிருமிகளால் அசுத்தமடைந்த முட்டைகள், தீவனம், ஆழ்கூளம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளை குழியில் போட்டு, சுண்ணாம்பு தூள் போட்டு புதைத்து விட வேண்டும்.

பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளிலிருந்து உபகரணங்களை மாற்றுதல் மற்றும் மனிதர்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்.

ஆழ்கூளம் மற்றும் கோழிக்குப்பைகளை எரித்தல், புதைத்தல் மற்றும் மக்கச் செய்தல் போன்ற செயல்முறைகளால் அவற்றிலுள்ள வைரஸை அழிக்கலாம்.

செயலிழக்கப்பட்ட இன்புளுயன்சா வைரஸ் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி பறவைக்காய்ச்சல் நோயால் கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பினைக் குறைப்பதுடன், கோழிகளில் இறப்பு ஏற்படுவதையும் தடுத்து, பண்ணையாளர்களுக்கு நட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மேலும், தடுப்பூசி அளிப்பதால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசியிலுள்ள வைரஸின் வகைக்கு மட்டுமே கிடைக்கும். எனவே இன்புளுயன்சா வைரஸின் எல்லா வகைகளுக்கும் தடுப்பூசி அளிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகும். ஒரு பகுதியில் நோய் ஏற்படுத்தும் வைரஸைக் கண்டறிந்த பிறகு அதற்கு தடுப்பூசி தயாரித்து, நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.

பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருந்தால், அதை கவனிப்பதெற்கென உள்ள அலுவலர்களுக்கு உடனடியாக நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதைத் தெரிவிக்க வேண்டும்.

click me!