இரத்தக் கழிச்சல் நோயும் கோழிகளை அதிகமாக தாக்கும் நோய்களில் ஒன்று. இதோ தகவல்...

 |  First Published Nov 22, 2017, 1:05 PM IST
Blood circulation is one of the most common diseases of chickens




இரத்தக் கழிச்சல் 

நோயின் தன்மை

கோழிகளைப் பாதிக்கக்கூடிய புரோட்டோசோவால் ஏற்படும் ஒரு முக்கியமான நோய் இரத்தக்கழிச்சல் ஆகும்.

கோழிகளின் 3-6 வார வயதில் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.

இறைச்சிக் கோழிகளிலும், ஆழ்கூளத்தில் வளர்க்கப்படும் கோழிகளிலும் அதிக அளவு இறப்பை இரத்தக்கழிச்சல் ஏற்படுத்துகிறது.

இந்நோய் கோழி வளர்ப்போருக்கு அதிக அளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு பெரிய காரணமாகும்.

நோய்க்கான காரணங்கள்

இந்நோய் ஐமீரியா எனும் புரோட்டோசோவாவின் ஏழு வகைகளால் ஏற்படுகிறது.

இந்த ஏழு வகைகளுக்கும் இடையில் எதிர்ப்பு சக்தி ஒற்றுமை இல்லை. அதாவது ஒரு வகையினால் பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றொரு வகையினால் பாதிக்கப்படும். ஒரு வகைக்கு எதிராக உருவான நோய் எதிர்ப்புத் திறன் மற்றொரு வகை ஐமீரியா புரோட்டோசோவாவின் தாக்குதலுக்கு எதிராக செயல்படாது.

ஐமீரியா டெனல்லா, ஐ. நெக்காட்ரிக்ஸ், ஐ.புருனெட்டை போன்ற ஐமீரிய வகைகள் கோழிகளில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஐ.டெனல்லா கோழிகளின் பெருங்குடலையும், ஐ.நெக்காட்ரிக்ஸ் சிறுகுடலின் நடுப்பகுதியினையும், ஐ.புருனெட்டை சிறு குடலின் கடைசிப் பகுதியையும் பாதிக்கிறது.

ஐ.மேக்சிமா, ஐ.அசருலினா போன்றவை மிதமான நோயினை ஏற்படுத்தும். ஐ.மேக்சிமா சிறு குடலின் நடுப்பகுதியினை பாதிக்கிறது. ஐ.அசருலினா சிறு குடலின் மேற்பகுதியினைப் பாதிக்கும்.

ஐமீரியாவின் முட்டைகளைக் கோழிகள் வாய் வழியாகச் சென்று நோயினை ஏற்படுத்துகிறது.

ஐமீரியா முட்டைகளால் அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர் மூலம் பரவுகிறது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம் மூலம் ஐமீரியாவின் முட்டைகள் சில வாரங்கள் மற்றும் சில நாட்களுக்கு வெளியேற்றப்படுகின்றன.

மனிதர்களின் நடமாட்டம், உபகரணங்கள், செருப்புகள் மற்றும் இதர ஐமீரியா முட்டைகளால் அசுத்தமடைந்த உயிரற்ற பொருட்களின் மூலமும் இந்நோய் பரவுகிறது.

கரப்பான் பூச்சிகள், எலியினைத்தைத் சார்ந்த விலங்குகள், வனப்பறவைகள் போன்றவற்றால் ஐமீரியா புரோட்டோசோவா பரப்பப்படுகிறது.

நோய் அறிகுறிகள் 

பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் தண்ணீர் வற்றி, இறக்கைகள் தொங்கிக் கொண்டு, இறகுகள் துருத்திக் கொண்டு இருக்கும்.

பாதிக்கப்பட்ட கோழிகள் கூட்டமாக ஒரு இடத்தில் அடைந்து காணப்படுதல். மேலும் பாதிக்கப்பட்ட கோழிகளில் தண்ணீர் போன்ற அல்லது இரத்தம் கலந்த கழிச்சல் காணப்படுதல்

பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சத்தில் இரத்தம், சளி போன்ற கோழை கலந்து காணப்படுதல்

பாதிக்கப்பட்ட கோழிகள் உடல் மெலிந்து, இரத்த சோகையுடன் காணப்படுதல்

கோழிகள் ஐமீரியாவால் பாதிக்கப்பட்ட 5 முதல் 6 நாட்கள் கழித்து அதிக அளவில் இறப்பு ஏற்படுதல்

உடல் எடை அதிகரிப்பது குறைதல்

முட்டையிடும் கோழிகளில் முட்டை உற்பத்திக் குறைதல்

நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட கோழிகளின் பெருங்குடலில் இரத்தம் உறைந்து காணப்படுதல்

சிறுகுடலில் நடுப்பகுதி அதன் சாதாரண அளவினை விட இரண்டு மடங்கு வீங்கிக் காணப்படுதல்

குடல் பகுதி முழுவதும் இரத்தம் தேங்கிக் காணப்படுதல்

சிறு குடலின் உட்சவ்வு முழுவதும் இரத்தத்திட்டுகள் காணப்படுதல்

குடலின் உட்சவ்வுப் பகுதி வீங்கி தடித்துக் காணப்படுதல்

நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்

இரத்தக்கழிச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட அதனைத் தடுப்பது மிகவும் எளிதானது.

இந்நோயினை மருந்துகள், நல்ல செயல்திறன் வாய்ந்த தடுப்பூசியினை இனப்பெருக்கக் கோழிகள் அல்லது முட்டைக் கோழிகளுக்கு அளிப்பது போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் இரத்தக்கழிச்சலைத் தடுக்கலாம்.

இரண்டு வகையான தடுப்பூசிகள் இரத்தக்கழிச்சல் நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கின்றன.

குடிதண்ணீர் மூலம் கோழிகள் 5-9 வார வயதில் தடுப்பூசிகளை தண்ணீர் வழியாக அளித்தல்

குஞ்சுகள் அவற்றின் இளம் வயதிலும், வளரும் பருவத்திலும் அவற்றின் தீவனத்தில் இரத்தக்கழிச்சல் நோயினைத் தடுப்பதற்கான மருந்தினை தீவனத்தில் சேர்த்தல். இதற்கு ஷட்டில் புரோகிராம் என்று பெயர்.

மேற்கூறிய முறையில் இரத்தக்கழிச்சல்நோய்க்கான மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி தோன்றாது.

சுகாதாரம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதாலும், தீவனம் மற்றும் தண்ணீர் போன்றவை கோழிகளின் எச்சங்களால் அசுத்தமடைவதைத் தடுப்பதால் நோய் வருவதைத் தடுக்கலாம்.

உலர்ந்த ஆழ்கூளம், ஆழ்கூளத்தை அடிக்கடி கிளறி விடுதல் போன்ற செயல்முறைகளால் ஐமீரியா முட்டைகள் ஸ்போருலேட் ஆவதைத் தடுப்பதால்,இரத்தக்கழிச்சல் நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மழைக் காலங்களில் சுண்ணாம்புத்தூளை ஆழ்கூளத்தில் தெளிப்பதால் ஆழ்கூளம் உலர்ந்து விடுவதுடன்,அதிலுள்ள ஐமீரியாவின் முட்டைகளும் அழிந்து விடும்.

தீவனத்தில் ஐமீரியா நோய்க்கிருமிகளுக்கெதிரான மருந்துகளை சேர்ப்பதால், கோழிகள் தீவிர இரத்தக்கழிச்சல் நோயினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

தீவனத்தில் உபயோகப்படுத்தப்படும் ஐமீரியா நோய்க்கிருமிகளுக்கெதிரான மருந்துகளை ஒவ்வொரு 4-6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதனால் அவற்றின் செயல்திறன் பராமரிக்கப்படுவதுடன், இந்த மருந்துகளுக்கெதிராக ஐமீரியா நோய்க்கிருமிகள் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதையும் தடுக்கலாம்.

நோய் பாதிப்புகள்ளான சமயங்களில் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

click me!