வாயு இயந்திர உற்பத்தி பொருளின் பயன்பாடு
வாயு இயந்திரத்தின் இரண்டு பிரதான உற்பத்திப் பொருள்களாவன (1) எரிபொருளாக வாயு (2) உரம். இதில் முதன்மை உற்பத்தி பொருளான எரிபொருளாக வாயு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
undefined
எரிபொருளாக வாயு
எரிபொருள் பொருள்களைச் சூடாக்கவோ அல்லது விளக்குகளை எரிக்கவோ அல்லது இயந்திரங்களை இயக்கவோ வாயு பயன்படுத்தலாம். இதில் 55% மீதேனும் 45% கரியமில வாயுவும் இருக்கின்றன.
இந்த வாயுவின் கலவை வேறு. கோல் கேஸ் அல்லது புர்ஷேன் காஸ் கலவை வேறு. ஆகவே இதைப் பயன்படுத்துவதற்கான பர்னர்கள், விளக்குகள் போன்றவைகளை விசேஷமான முறையில் அமைக்க வேண்டியிருக்கிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின், இந்த காஸுக்கு ஏற்ற கருவிகளின் டிஸைன்களை கதர் கிராமத் தொழில் கமிஷன் தயாரித்திருக்கிறது.
கோல் காஸுக்கான ஸ்டாண்டர்டு கருவிகளின் அளவுக்கு இந்தக் கருவிகள் பயனளிக்கின்றன. அதே சமயம், கோல் காஸ் அல்லது லி.நி.றி. காஸ் பர்னர்களில் கோபார் காஸைப் பயன்படுத்தினால் பலன் குறைச்சலாகவே இருக்கிறது.
ஆகையால் சாண எரிவாயுவின் முழு பலன் கிடைக்க, கமிஷன் நிர்ணயித்துள்ள அடுப்புகளையும், விளக்குகளையும் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
கரிம வாயு ஆயில் எஞ்சின் பராமரிப்பு :
சாண எரிவாயுவும் டீசலும் இரட்டை எரிபொருளாக என்ஜினை இயக்கவும், சாண எரிவாயுவை மட்டும் கொண்டு பெட்ரோல் என்ஜினை இயக்கவும் முடியும். இதற்கு என்ஜினில் காற்று அல்லது எரிபொருள் கலவை உட்புகும் குழாயுடன் சாண எரிவாயு சாதனத்தில் இருந்து வரும் குழாயை இணைக்கவேண்டும்.
எஞ்சின் நல்ல முறையில் இயங்குவதற்கு வாயுவுடன் சிறிதளவு நீர் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எற்கனவே சுத்தப்படுத்தப்பட்ட வாயுவை சுண்ணாம்பு உள்ள பாத்திரத்தின் வழியே செலுத்தி சுத்தப்படுத்தலாம். எஞ்சினை இயக்குவதற்கு சாண எரிவாயுவை பயன்படுத்துவது மூலம் எஞ்சினில் கரிபடியும் தன்மை மிகவும் குறைகிறது.
மேலும் என்ஜின் ஒரே சீராக இயங்குவதற்கும், உராய்வை கட்டுப்படுத்தும் எண்ணெய் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் வழி செய்கிறது. இதனால் உராய்வை கட்டுப்படுத்தும் எண்ணெயை அடிக்கடி மாற்றத் தேவையில்லை.
ஒரு குதிரை சக்தி கொண்ட என்ஜினுக்கு ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் வாயு அளவு 16 லிருந்து 19 கன அடி. ஒரு கன மீட்டர் கலன் ஒரு நாளைக்கு 35 கன அடி வாயுவை உற்பத்தி செய்யும். கரிம வாயுவினால் இயங்கும் என்ஜின்களுக்கு குளிர வைப்பது தேவைப்படுகிறது.
டீசல் என்ஜினில் காற்று உட்செல்லும் குழாயுடன் ஒரு துளைக் கருவியை பொருத்தி அத்துடன் கரிம வாயு வரும் குழாயை இணைத்து விடவேண்டும். எப்படியும் 20 சதவீதம் டீசலும் 80 சதவீத கரிம வாயும் தேவைப்படுகிறது. ஏனெனில் கரிம வாயுவின் எரிநிலை காற்றைவிட சற்று கூடுதலாக உள்ளது.
5 குதிரை சக்தியுள்ள இயந்திரம் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் டீசலினால் இயங்கினால் ஒரு மாதத்திற்கு 120 லிட்டர் டீசல் ஆகும். ஆனால் மேலே குறிப்பிட்ட கால அளவிற்கு கரிம வாயுவும் டீசலும் ஆன கலவையினால் ஆன எரிபொருளை உபயோகித்தால் அந்த எந்திரத்திற்கு 24 லிட்டர் டீசல் மட்டும் போதும். ஒரு மாதத்திற்கு இதனால் 96 லிட்டர் டீசல் மீதப்படுகிறது.
கரிம வாயுவினால் இயங்கும் இயந்திரங்களில் பலவகை உள்ளன. தண்ணீர் மற்றும் காற்றினால் குளிர வைக்கும் இயந்திரங்களில் 3 குதிரை சக்தி முதல் 75 குதிரை சக்தியுள்ள இயந்திரங்கள் உள்ளன.
இயந்திரத்தில் கரிம வாயு தீர்ந்து விட்டால், இயந்திரத்தை தானே டீசலில் இயங்கவைக்கும் ஏற்பாடு உள்ளது. கரிமவாயு மற்றும் டீசல் கலவையில் இயங்கும் இயந்திரத்தினால் வெளியேறும் புகையை வெளியேற்றும்.
மேலும் கரிமவாயுவை உபயோகப்படுத்தும் போது கார்பன் வடிவது குறைவாக இருக்கும். டீசலினால் இயங்கும் இயந்திரத்தோடு ஒப்பிடும் போது கரிமவாயுவினால் இயங்கும் இயந்திரம் நன்கு பராமரிக்கப்படுகிறது.
டீசல் தட்டுப்பாடும், மின்சாரம் கிடைப்பதில் சிரமமும் இருக்கும் இவ்வேலையில், கரிமவாயுவை உபயோகித்து நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்குவது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு செலவில் கணிசமான மிச்சத்தையும் நாட்டில் பொருளாதார சுபிட்சத்திற்கும் வழி வகுக்கும்.
விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள எண்ணற்ற நீர் இறைக்கும் இயந்திரங்களை இவ்வாறு மாற்றி அமைத்துப் பயன்பெறலாம் மேலும் ஒரு குதிரை சக்தி உள்ள ஆயில் எஞ்சின் ஒரு மணி நேரம் ஓடுவதற்கு 0.45 கன மீட்டர் கரிமவாயு தேவைப்படும்.
எனவே, ஐந்து குதிரை சக்தி உள்ள ஆயில் எஞ்சினை நான்கு மணி நேரம் இயக்குவதற்கு 9 கன மீட்டர் கொள்ளளவு உள்ள கரிமவாயு கலன் அமைக்கப்படவேண்டும். இதனை அமைக்க குறைந்த பட்சம் 10 முதல் 15 கால்நடைகள் தேவைப்படும்.