கௌட்
நோயின் தன்மை
கௌட் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் இந்த நிலையால் பாதிக்கப்பட்ட கோழிகளில் சிறுநீரகம் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும்.
இந்நிலையினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இரத்தத்தில் அளவிற்கு அதிகமாக யூரிக் அமிலம் இருக்கும்.
இந்நிலையினால் பாதிக்கப்பட்ட மூட்டுகளிலும், உள் உறுப்புகளிலும் யூரேட் உப்புகள் படிந்திருக்கும்.
இந்நிலையினால் பாதிக்கப்பட்ட கோழிகள் சிறுநீரக பாதிப்பால் இறந்து விடும்.
முட்டைக் கோழிகளுக்கு அளவிற்கு அதிகமாக கால்சியம் தீவனத்தில் அளிப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் இரண்டு விதமான அறிகுறிகள் ஏற்படும். உள் உறுப்பு கவுட் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கவுட்.
காரணங்கள்
சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதால் யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிக அளவு இருக்கும்.
பாதிக்கப்பட்ட கோழிகளின் தண்ணீர் அளவு குறைந்து காணப்படும்.
தீவனத்தில் அதிக அளவு கால்சியம் சத்து காணப்படுதல்
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தின் அளவு முறையற்றுக் காணப்படுதல்
வைட்டமின் ஏ குறைபாடு
அதிகப்படியாக உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
யூரோலித்தியாசிஸ் மற்றும் மைக்கோடாக்சின்கள்
எலெக்ட்ரோலைட்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருத்தல்
சோடியம் கார்பனேட் நீண்ட நாட்களுக்கு கொடுப்பதால்
நோய் அறிகுறிகள்
மூட்டுகளில் வீக்கம், சாக்பீஸ் போன்ற வெள்ளையான பொருட்கள் மூட்டுகளில் படிந்தும் காணப்படுதல்
பொதுவாக இறக்கை மற்றும் கால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும்.
சேவல்களில் மூட்டுகள் பொதுவாக பாதிக்கப்படும். ஆனால் உள்உறுப்புகளில் பாதிப்பு சேவல்களிலும் பெட்டைக் கோழிகளிலும் காணப்படும்.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டு, அவற்றில் வெள்ளையாக யூரேட் உப்புகள் படிந்துக்காணப்படும்.
உள்உறுப்புகள் பாதிக்கப்படும் கவுட் நிலையில் சிறுநீரகங்கள் வீங்கி, சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது தவிர குடல் சவ்வு, இதயம், இரைப்பை முன் பை மற்றும் நுரையீரல்களிலும் வெள்ளையான சாக்பீஸ் போன்ற பொருள் படிந்து காணப்படும்.
இது தவிர உறுப்புகளைச் சுற்றி யூரேட் உப்பு படிந்து ஒரு உறை போன்று காணப்படும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சியினை அடைவதற்காக அவற்றிற்கு அதிகப்படியான கால்சியம் சத்தை தீவனத்தில் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக புரதம் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.
தீவனத்தில் மக்காச்சோளத்தின் அளவினை அதிகரித்து, தீவனத்தின் உட்பொருட்களை சேர்த்து தீவனம் தயாரிக்க வேண்டும்.
தாது உப்புகள் நிறைந்த தண்ணீரை அதிகமாகக் கோழிகளுக்கு அளிக்க வேண்டும்.