தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பு லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. அரசின் திட்டங்களாலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை கழக பயிற்சிகளாலும், மக்கள் அதிகம் பேர் அசைவத்திற்கு மாறி வருவதாலும் காடை தொடங்கி முயல் வரை கால்நடை வளர்ப்போர் அதிகமாகி வருகின்றனர்.
பலருக்கு வேலை வாய்ப்பு நல்கி வரும் லாபகரமான தொழிலாக நகரங்களிலும், கிராமங்களிலும் பிரபலமாகி வருகிறது. நபார்டு போன்ற வங்கிகள் கடனும் வழங்கி வருகின்றன.
இறைச்சி, தோல், ரோமம் ஆகியவற்றிற்காக முயல் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. முயல்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்பவை. தாம் உட்கொள்ளும் தாவர புரதங்களில் இருந்து 20 சதவிகிதம் வரை இறைச்சியாக மாற்ற வல்லவை.
பண்ணை அமைத்து முயல் வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம். நார்ச்சத்து உள்ள தாவரங்களை உட்கொண்டு நல்ல தரமான இறைச்சியை முயல்கள் தருகின்றன.
முயல்கள் மாறுபடும் தட்ப வெப்ப நிலைகளினாலோ, நோய் கிருமிகளினாலோ பாதிக்கப்படுவதில்லை.
இதர விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியோடு, முயல் இறைச்சியை ஒப்பிட்டால், இது கொழுப்பு சத்து குறைவாகவும், ‘ஸ்டீயரிக்’ மற்றும் ‘ஒலியிக்’ கொழுப்பு சத்து குறைவாகவும் உள்ளது. சில வகை உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.
முயல்களில் இருந்து இறைச்சியை மட்டுமின்றி, தோலில் இருந்தும், ரோமத்தில் இருந்தும் அழகு சாதனங்களை உற்பத்தி செய்யலாம்.
முயல்களின் கழிவு பொருட்கள் விவசாயத்திற்கும் சிறந்த உரமாக பயன்படுகிறது. நல்ல வெளிச்சம், வெப்பநிலை, ஈரப்பதம், காற்றோட்டம் உள்ள இடத்தில் முயல் பண்ணை அமைக்கலாம்.
வெள்ளை ஜெயன்ட், பிளமிஷ், நியூசிலாந்து வெள்ளை, சோவியத் சின்சில்லா, கலிபோர்னியன் ஆகியவை இறைச்சிக்காகவும், ஆல்கோரா ரகம் ரோமத்திற்காகவும் ரெக்ஸ், சேஷன், போலிஷ் வெள்ளை ஆகியவை அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
முயல்களை வளர்க்கப் பயிற்சி பெற்று நவீன முறையில் விஞ்ஞான பூர்வமாக வளர்க்க வேண்டும். பண்ணைகளில் சிறிய எண் பொறிக்கப்பட்ட வளையத்தை பின் அல்லது பிளாஸ்டிக் பட்டைகளை காதுகளில் இடுக்கி போல் பொருத்தலாம்.
இளம் குட்டிகளில் காதில் பச்சை குத்துவது முயல்களை அடையாளம் வைத்து கொள்ள உதவும். நவீன பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பசுந்தீவனம், (புல் வகை, பசுந்தீவனம்), மரவகை பசுந் தீவனங்கள், கலப்பு தீவனம் கொடுக்க வேண் டும். கையாளும் முறைகளில் இன விருத்தி பராமரிப்பு, நோய்கள், பண்ணைகளில் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகளை பற்றி அறிந்திருக்க வேண்டும்.