காய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம்.
வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது.
கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை.
ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே குழித்தட்டு முறையில் நாற்றுகள் தயாரிக்கலாம்.
ஒரு எக்டேருக்கு 2,300 நாற்றுகள் தேவை. டிரைக்கோடெர்மா விதை 4 கிராம் அல்லது சூடாமோனாஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதையுடன் கலந்து நாற்றுக்களை நிழல் வலை நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்தால் நல்லது. 35 முதல் 40 நாள் வரை வயதுடைய ஆரோக்கியமான நாற்றுகளை இரு வரிசை நடவு முறையில் 90 செ.மீ., 60 செ.மீ., 60 செ.மீ., என்ற இடைவெளியில் நட்டு ஒரு வாரம் கழித்து ‘பாகு வாசி’ முறையில் கன்று நடவு செய்ய வேண்டும்.
நான்கு அடி அகலம் உடைய மேட்டுப்பாத்தியில் நட்டால் நன்கு வளரும். ஒரு அடி இடைவெளி விட்டு மேட்டுபாத்தி அமைத்தல் அவசியம். சொட்டு நீர்ப்பாசனம் பக்கவாட்டு இணை குழாய்களை நான்கு அடி மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்குமாறு அமைத்து நீர்ப்பாய்ச்சவும், முதல் பாசனத்திற்கு மண் நனைய மண்ணின் தன்மையை பொறுத்து 8-12 மணி நேரம் ஆகும்.
பாசன அமைப்புக்கு ஏற்ப 30 மைக்ரான் பாலிதீன் சீட் போர்த்தி ஓட்டை இட்டு நாற்றுகளை 40 நாள் வயதுள்ளவைகளை ஊன்ற வேண்டும். நடவு செய்தது முதல் தினமும் ஒரு மணி நேரம் நீர் நிர்வாகம் தேவை.
நடவு செய்த முன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் கரையும் உரப்பாசனம் தேவை. ஒரு எக்டேருக்கு தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 80 கிலோ தேவை.
இதற்கு கடைசி உழவின்போது அடிஉரமாக எக்டேருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் இட்டு மண்ணை தயார் செய்ய வேண்டும். நட்ட 11ம் நாள் முதல் 40 நாள் வரை 10 முறை உரம் செலுத்த வேண்டும்.
வேளாண் அலுவலர்கள் உதவியுடன் மிளகாய் நடவு செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.