பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விற்று வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் கரும்புகள் பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வெல்லம் காய்ச்ச கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு உருண்டை மற்றும் அச்சு வெல்லமாக தயார் செய்யப்பட்டு, 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டப்படுகிறது.
பின்னர், பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகளால் வெல்லம் ஏலச் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, தரத்துக்கு ஏற்ப ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர். மேலும், ஏலம் எடுக்கப்படும் வெல்லம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ஆயிரத்துக்கும், உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1050-க்கும் ஏலம் போனது.
அச்சு வெல்லம் 6 ஆயிரத்து 500 சிப்பங்களும், உருண்டை வெல்லம் 6 ஆயிரம் சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1250-க்கும், உருண்டை வெல்லம் ரூ.1200-க்கும் ஏலம் போனது.
வெல்லம் விலை உயர்ந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.