மிளகாய் உற்பத்தி:
இந்தியாவில் அதிக அளவில் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு எக்டருக்கு சராசரியாக 860 கிலோ மகசூல் கிடைக்கிறது.
உலக உற்பத்தியில் சுமார் 25 மூட்டை அளவு இந்தியாவில் உற்பத்தியாகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மிளகாயில் 4 மூட்டை அளவு மட்டுமே ஸ்ரீலங்கா, கனடா, சவூதி, அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மிளகாய் உணவுப் பொருட்களில் காரத்தை சேர்ப்பதற்கும், சிகப்பு நிற கலரை கூட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மிளகாயில் 6 மூட்டை அளவு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
சாகுபடிக்கு ஏற்ற மாதங்கள்
மிளகாயில் கே1, கே2, கோ1, கோ2, கோ3, பிகேஎம்1, பிகேஎம்2 ஆகிய ரகங்களாகும்.
சாகுபடிக்கு ஏற்ற பருவம்:
ஜனவரி, பிப்ரவரி, ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற மாதங்களாகும்.
சாகுபடிக்கு ஏற்ற மண்:
நல்ல வடிகால் வசதியுடைய சத்துக்கள் நிறைந்த மணற்பாங்கான நிலம் சாகுபடிக்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை உள்ள நிலங்கள் மிளகாய் சாகுபடிக்கு உகந்ததாகும்.
நாற்றங்கால் தயாரித்தல்
ஒரு எக்டர் அளவு நடவு செய்ய ஒரு கிலோ அளவுள்ள தரமான விதை போதுமானது. ஒரு கிலோ அளவுள்ள விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியினை கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
ஒரு எக்டர் நடவு செய்ய 100 சதுரமீட்டர் அளவுள்ள நாற்றங்கால் போதுமானது. நிலத்தை கட்டியில்லாமல் நன்கு கொத்தி, 10முதல்15 நாட்களுக்கு ஆறவிட்டு, பிறகு 10 செ.மீ. உயரம் உடைய மேட்டுப்பாத்திகளில் கோடுகள் கிழித்து, அதில் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும். பிறகு மணல் கொண்டு மூடிவிட வேண்டும்.
பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்
வாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற அளவில் கரைத்து நாற்றங்காலில் ஏற்படும் நுனிக் கருகல், வேர் அழுகல், நோயை கட்டுப்படுத்தலாம்.
மேலும் விதை விதைக்கும்போது, ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு 10 கிராம் என்ற அளவில் பார்போபியூரான் இடுவதன் மூலம் நாற்றங்காலை சேதப்படுத்தும் நூற்புழு மற்றும் இதர பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
40 முதல் 45 நாட்களில் நாற்றுகள் நடுவதற்கு தயாராகிவிடும்.
நடவு வயல் தயார் செய்தல்
நிலத்தை 4 அல்லது 5 முறை கட்டியில்லாமல் நன்கு புழுதியாக இருக்குமாறு நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது, 25 மெட்ரிக்டன் நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.
45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, அதில் 30 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். கோ3 ரகத்தை பார்கள் அமைக்காமல் 30க்கு 15 செமீ இடைவெளியில் நடவு செய்யலாம்.
மண்ணின் தன்மைக்கேற்ப ஒரு வார இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்
30 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய 66 கிலோ, மணிச்சத்து கொடுக்கக்கூடிய 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய 48 கிலோ மியூரியேட் ஆப் பொட்டர் ஆகிய உரங்களை அடி உரமாக இட வேண்டும்.
நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் 30 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய 66 கிலோ யூரியாவை மேல் உரமாக இடவேண்டும். சாம்பல் சத்திற்கு பொட்டாசியம் சல்பேட் உரத்தை இடுவதன் மூலம் மிளகாயின் தரத்தை உயர்த்தலாம்.
களை நிர்வாகம்
நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் ஒரு களை எடுக்க வேண்டும். 45வது நாளில் 2வது களை எடுத்து மண் அணைக்க வேண்டும். மிளகாயில் இரண்டு வரிசைகள் வெங்காயம் நடவு செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.
நடவு செய்த 20, 40, 60, 80வது நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் 1.25மிலி டிரையகாண்டினால் தெளிப்பதன் மூலம் பூ, பிஞ்சு, மற்றும் காய்கள் உதிர்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
பயிர் பாதுகாப்பு
காய் துளைப்பானை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறிகளை ஒரு எக்டருக்கு 12 என்ற அளவில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை பொறுக்கி அழிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ் கலந்து தெளிக்கவும். 1.25 கிலோ கார்பரில் மருந்து, 1.25 கிலோ வெல்லம் ஆகியவற்றுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி மாலை வேளையில் வயலில் போடவும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் கார்பரில் அல்லது 3மிலி குளோர் பைரிபாஸ் அல்லது 2 மிலி குயினால்பாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்கவும்.
இலைப்பேனை கட்டுப்படுத்த வழி
இலைப்பேனை கட்டுப்படுத்த டைமெத்தாயேட் 2மிலி அல்லது மீதைல் டெமட்டான் 2 மிலி அல்லது பார்மத்தியான் 2 மிலி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது 3 முறை தெளிக்கவும்.
அசுவினியை கட்டுப்படுத்த அசிப்பேட் 1 கிராம் அல்லது மீதைல் டெமட்டான் 2 மிலி அல்லது பாஸலோன் 2 மிலி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்கவும்.
மஞ்சள் முரணை சிலந்தி பூச்சியை கட்டுப்படுத்த டைகோபால் 2.5மிலி அல்லது எத்தியான் 4 மிலி அல்லது 6 கிராம் நனையும் கந்தகம் இதில் ஏதாவது ஒன்றை தெளிக்கலாம்.
விதை நேர்த்தி
வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ஏதாவது ஒன்றுடன் கலந்து விதை நேர்த்தி செய்து, கட்டுப்படுத்தலாம்.
மேலும் 2.5 கிலோ சூடோமோனாஸ் 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவும். வயலில் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக்கொள்ளவும். 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, ஒரு சதுர மீட்டருக்கு 4 லிட்டர் என்ற அளவில் ஊற்றவும்.
மேன்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
நோய்க் கட்டுப்பாடு
சாம்பல் நோய்க்கு நனையும் கந்தகம் 3 கிராம் அல்லது கார்பன்டாசிம் 1 கிராம் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயின் அறிகுறி தோன்றியதில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும்.
இலைக்கருகல் மற்றும் பழ அழுகல், மேன்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயின் அறிகுறி தோன்றியதில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
5 வரிசை மிளகாய்க்கு 2 வரிசை மக்காசோளம் அல்லது சோளம் ஏதேனும் ஒன்றை நடவு செய்து காற்றின் வேகத்தை குறைப்பதன் மூலம் கட்டப்படுத்தலாம். மேலும் இந்நோய் பரப்பக்கூடிய அசுவினியை கட்டுப்படுத்த வேண்டும்.
அறுவடை
நடவு செய்த 90வது நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையாக 6, 7 தடவை மிளகாய் பழங்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த மிளகாய் பழங்களை காய வைத்து இருப்பு வைக்கலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 2 முதல் 3 மெட்ரிக் டன் வரை வற்றல் மிளகாய் அல்லது 10 முதல் 15 மெட்ரிக் டன் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கும்.