பண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது அதிகப்படியான ஆள்களும், அதிக நேரமும் தேவைப்படுகிறது இதனால், செலவும் அதிகமாகும்.
வேலையாள்களின் தேவையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்வதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம்.
தீவன நறுக்கி:
தீவனங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம்.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை அப்படியே தீவனத் தொட்டியில் போடுவதை விட சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடுவதன் மூலம் கால்நடைகளின் தீவனம் உள்கொள்ளும் அளவு கூடுவதோடு, சேதாரத்தை 20 முதல் 30 சதம் வரை குறைக்க முடியும்.
கால்நடைகள் இலை, தண்டு என்று பாகுபாடு இன்றி அனைத்துப் பாகங்களையும் உள்கொள்வதுடன் தீவனத்தின் செரிமானத் தன்மையும் கூடுகிறது.
மேலும், கால்நடைகளுக்குக் கிடைக்கும் நிகர எரிசக்தியின் அளவும் அதிகரிக்கிறது.
என்ன செய்யும்?
இந்தக் கருவி மின் மோட்டார் இணைப்புடனும் கிடைக்கிறது.
மின் இணைப்பு இல்லாத இடங்களில் பயன்படுத்தும்படி, கையால் இயங்கும் வகையிலும் கிடைக்கிறது.
தவிர, டீசல் என்ஜின், டிராக்டர் வண்டியுடன் இணைந்து செயல்படும் இயந்திர மாதிரிகளும் உள்ளன.
இதில், கைகளால் இயக்கும் இயந்திரம் மூலம் மணிக்கு 50 முதல் 70 கிலோ தீவனங்களை நறுக்க முடியும்.
ஒரு குதிரைத் திறன் (ஹெச்பி) சக்தியுடைய மின் மோட்டாருடன் இணைந்த இயந்திரம் மூலம் மணிக்கு 200 முதல் 250 கிலோவும், 1.5 ஹெச்பி திறன் மோட்டாருடன் கூடிய இயந்திரம் மூலம் மணிக்கு 300 முதல் 350 கிலோவும், 2 ஹெச்பி திறன் மோட்டாருடன் கூடிய இயந்திரம் மூலம் மணிக்கு 500 முதல் 600 கிலோ வரையும் தீவனங்களை நறுக்க முடியும்.
இவற்றின் மூலம் வேலையாள்களின் தேவை, நேரத்தையும் குறைத்து, செலவினங்களையும் கட்டுப்படுத்தலாம்