உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் பற்றி பயந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே முழக்கம்தான் எங்கும் கேட்கிறது. ஆனால், நாம் முதலில் மரத்தை வெட்டவேண்டும். பிறகுதான் நட வேண்டும். அப்போது தான் நாம் நடும் மரத்திற்கு நல்லது. புரியவில்லையா? அப்போ இதை படியுங்கள்...
நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் “ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும்" என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
அமெரிக்க தாவரவியல் பூங்கா, ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது.
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன.
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல இப்போதைய பிரச்சனை. இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல்படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.