மனிதன், விலங்குகள், மரம் மற்றும் உயிரற்ற கல், மண் போன்றவற்றின் வயதைக் கண்டுபிடிப்பது கடினமான விஷயம்.
மரத்தின் வயது ? அதை எப்படி கண்டுபிடிப்பது ?கண்டுபிடிப்பது சாத்தியமா ?. சாத்தியமே !
கார்பன் டேட்டிங் என்ற முறைப்படி மரத்தின் வயதை கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கு பரிசோதனை கூடம் தேவைப்படும். அதை விடுத்து எளிதான முறை ஒன்று உண்டு. அது அந்த மரத்தையே கேட்டு விடுவது தான்.
மனிதன் தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை, அவன் மூளை பதிவு செய்வது போல, மரங்களும், தன் வாழ்நாளை பற்றிய குறிப்புக்களை, மற்றவர்கள் பார்ப்பதற்காக சேகரித்துவைக்கிறது.
ஒரு மரம் வெட்டப்பட்ட உடன், அதன் அடிப்பாகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பாருங்கள். வயதான மனிதனின் முகத்தை போல பல வட்ட வடிவமான வரிகள் காணப்படும். ஒவ்வொரு வட்டமும் ஒரு வருடத்தை அல்லது வளர்ச்சி பருவத்தை குறிக்கிறது. மொத்த வட்டங்களின் எண்ணிக்கை, அதன் வயதை குறிக்கிறது. கீழே உள்ள படத்தைப் பார்ப்போம்.
படத்தில் அம்புகுறி (C), இந்த மரம் வளர தொடங்கிய ஆண்டை குறிக்கிறது.
(B) ஒரு வளையத்துக்கும் அடுத்த வளையத்துக்கும் நடுவில் உள்ள இடைவெளி, ஒரு வருடத்தில் இந்த மரம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இந்த இடைவெளி ஒரே மாதிரி இல்லாதது, ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சியில் இருந்த மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை குறிக்கிறது.
(A) இந்த கருவளையம், அந்த ஆண்டில் காட்டுத்தீ அல்லது கடும் பஞ்சம் ஏற்பட்டதை குறிக்கிறது.
கணக்கின் படி இந்த மரம் சுமார் 42 வயதுடையது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உயிரோடு இருக்கும் மரங்களில், சிறு துளையிட்டு, அதன் மூலம் கிடைக்கிற மர வளையங்களை வைத்து வயதைக் கண்டறிவார்கள்.
கனடா நாட்டில், குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இந்த செயல்முறை கூடிய பயிற்சி இருக்கிறது. நமது வீட்டுக்கு அருகிலுள்ள மரங்களின் வயதை கண்டுபிடிப்போம்; குழந்தைகளுக்கு இதனை கற்றுக்கொடுப்போம்.