கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர்.
undefined
வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
\நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும்.
கேழ்வரகு
கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது.
தினை
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.
சாமை
ஒரு எக்டரில் சுமார் 1030 கிலோ என்ற அளவுக்கு மகசூலை சாமை பயிரில் பெறலாம். இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.
வரகு
வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த காலத்தில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறினர். இதன் காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை செய்கின்றனர். இதன் விதைகள் நீண்ட கால சேமிப்பிற்கு பிறகும் நன்றாக முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழையைக் கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும்.
உடல் புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் ஆற்றலும் வரகுக்கு உண்டு.
பனிவரகு
இந்த பயிர் மிககுறுகிய வயதுடையது. மானவாரி பருவத்தில் விவசாயிகள் லாபம் பெறுவதற்கான ஒரு பயிர் என்றால் அது பனிவரகு என்று சொல்லலாம். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் அறிமுகமானது. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். உமி நீக்கப்பட்ட பனிவரகு தானியமானது, அதிக புரதச்சத்தை கொண்டது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் வளரும் இயல்பு கொண்டது.
சரியான பருவத்தில் விதைக்கும் போது எந்த வகை பூச்சி, பூஞ்சாணமும் அதிகமாக இந்த பயிரை தாக்குவதில்லை. பனிவரகில் இருந்து அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, புட்டு, முருக்கு, பக்கோடா, சேலட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.
சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.
குதிரைவாலி
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது. வளமற்ற நிலங்கள் கொண்ட வறுமையான விவசாயிகளும் இதனை பயிரிடலாம். இந்த பயிர் மாட்டுத்தீவனமாகவும், மக்காச்சோளத்துடன் கலந்து பயிரிடப்படுகிறது.