ரொம்ப சுலபமாக யோகர்ட் தயிர் தயாரித்து விற்பனை செய்து நல்ல லாபம் அடையலாம்...

 |  First Published Jul 26, 2017, 12:36 PM IST
Yogurt curd can be very easy to make and sell...



வீடுகளில் சாதாரணமாக பாலில் உறையூட்டி தயிர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த தயிரை விட குறிப்பிட்ட நுண்ணுயிர் கலவைகளை சேர்த்து தயாரிக்கப்படும் “யோகர்ட் தயிர்” என்பது சுவையானது. இதனை வர்த்தகரீதியாக பால் பண்ணையாளர்களோ, புதிய பண்ணை தொழில்வாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களோ தயாரித்து விற்பனை செய்ய முடியும்.

யோகர்ட் தயிர்

Tap to resize

Latest Videos

யோகர்ட் தயிர் என்பதும் ஒரு உறையூட்டப்பட்ட பால் பொருள் தான். இந்த தயிரானது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் போன்ற நுண்ணுயிர்க் கலவைகளை சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

சிறப்புகள்

1. யோகர்ட் தயிரில் உள்ள நுண்ணுயிரிகள் பாலில் உள்ள சர்க்கரைப் பொருளை சிதைத்து குளுகோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆக மாற்றுகின்றன. இதனால் இந்த தயிரை நோயாளிகளுக்கும், ஒவ்வாமை கொண்ட குழந்தைளுக்கும் கூட கொடுக்கலாம்.

2. யோகர்ட் தயிர் உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது.

3. இதில் புரதச்சத்து, போலிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற உயிர்ச்சத்துக்களின் அளவும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் அளவும் அதிகமாக இருக்கிறது.

4. யோகர்ட் தயிரின் சிறப்பே அதன் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பண்பில் தான் அடங்கி இருக்கிறது. யோகர்ட் தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகள், அபாயகரமான நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனால் மனிதருக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, புற்று நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

5. இரத்தத்தில் கொழுப்பு சத்து அளவு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றையும் யோகர்ட் தயிர் தடுக்கிறது.

யோகர்ட் தயிருக்கும் சாதாரணத் தயிருக்கும் உள்ள வேறுபாடுகள்

1. சாதாரண தயிரில் கொழுப்பு சாராப் பொருட்களின் சதவிகிதம் என்பது 8.5 சதம் வரை இருக்கும். அதாவது, தயிரில் இருக்கும் கொழுப்பை தவிர்த்து மீதமுள்ள திடப்பொருட்களின் அளவு என்பது 8.5 சதவீதம் இருக்கும். ஆனால் யோகர்ட் தயிரில் இந்த திடப்பொருட்கள் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். இதனால் யோகர்ட் தயிரின் தரமும், மிருதுத்தன்மையும் உயருகிறது.

2. சாதாரண தயிர் தயாரிக்க பல்வேறு நுண்ணுயிர் கலவைகளை நாம் உபயோகிக்கிறோம். ஆனால் யோகர்ட் தயிர் தயாரிக்க நாம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் ஆகிய நுண்ணுயிரிகளை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கிறோம்.

3. நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வெப்ப அளவு இந்த இரண்டு பண்டங்களுக்கும் வேறுபடுகிறது. சாதாரண தயிர் தயாரிக்க 13 முதல் 16 மணி நேரத்திற்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆனால் யோகர்ட் தயிருக்கு 4 மணி நேரத்திற்கு 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் போதுமானது.

எனவே, மருத்துவ குணம் கொண்ட இந்த யோகர்ட் தயிரை தயாரித்து விற்பனை செய்ய பால்பண்ணையாளர்களும், இளைஞர்களும் முன்வரலாம். இதனால் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

இந்த யோகர்ட் தயிர் தயாரிப்பதற்கான பாக்டீரியாக்கள் சென்னை கால்நடை கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!