பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு
முன்பு பருத்திக் கொட்டை பெருமளவில் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கிடைத்து வந்தது. மனிதத் தேவைக்கு எண்ணெய் கிடைக்காத சூழ்நிலையும், பலவகை எண்ணெய்களை வாசனையற்றுச் சுத்திகரிக்கும் சூழ்நிலையும், பருத்திக் கொட்டையை எண்ணெய் வித்தாக மாற்றி விட்டது. இப்போது பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு கிடைக்கின்றது. இதுவும் சிறந்த வெள்ளாட்டுத் தீவனமே. இதில் பைபாஸ் புரதம் (By Pass Protein) அதிகம் உள்ளது.
அரிசித் தவிடு
இது சிறந்த வெள்ளாட்டுத் தீவனம் உமி கலவாமல், நன்கு சலித்துத் தீவனமாக அளிக்க வேண்டும். தற்போது வீடுகளில் கிடைக்கும் நெல் தவிர ஆலைகளிலிருந்து நெல் தவிடு வெள்ளாட்டுத் தீவனமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் சூழ்நிலையிலும், உமி கலந்ததாகவே உள்ளது.
இப்போது நெல் தவிட்டிலிருந்து பெருமளவில் எண்ணெய் எடுப்பதால் எண்ணெய் நீக்கிய தவிடு, கலப்பினத் தீவனம் தயாரிப்போருக்குக் கிடைக்கின்றது. தவிட்டில் உள்ள உமி, வெள்ளாட்டுக் குடலில் அழற்சியை உண்டு பண்ணும்.
கோதுமை தவிடு
இது சிறந்த தீவனமாகும். இது அதிக விலையில் விற்றாலும் எங்கும் கிடைக்கின்றது. இதனைப் பண்ணையாளர்கள் கலப்புத் தீவனம் தயாரிக்க நன்கு பயன்படுத்தலாம்.
தானிய வகைகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நவ தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலிவாக இருக்கும் தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நெல் மட்டும் விளையும் பகுதியில் அரிசி நொய் சேர்த்துக் கொள்ளலாம். யாவருமே அரிசியையே விரும்பி உண்ணத் தொடங்கிய சூழ்நிலையில் நவ தானியங்களைக் கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை சிறந்தவை.
இது தவிரப் பயறு வகைகளில் கொள்ளு (காணம்) பொதுவாக மலிவான விலையில் கிடைப்பதால், இதனையும் அரைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். இதன் காரணமாகப் பிண்ணாக்கு அளவைக் கலப்பது தீவனத்தில் குறைக்கலாம். எண்ணெய்க்காக எண்ணெய் வித்துக்கள் செக்கில் ஆட்டப்படும்போது கிடைப்பது பிண்ணாக்கு. எல்லாவிதப் பிண்ணாக்கும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனமாகாது.
எல்லாவித எண்ணெயும் மனிதனுக்கு ஆகாததுபோலச் சத்து மிகுந்ததும், நச்சுத் தன்மை அற்றதும், நம் பகுதியில் கிடைப்பதுமான பிண்ணாக்குகள் குறித்துப் பார்க்கலாம். பொதுவாகத் தழையில் கிடைக்காத பாஸ்பரஸ் இவற்றில் அதிகம் கிடைக்கும்.