உள்நாட்டு மாட்டு இனங்களின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் நம்மைச் சுற்றி இன்றைக்கு வாழும் பால் மாடுகள் நாட்டு மாடுகள் இல்லை. பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மாட்டினங்கள் அல்லது அவற்றின் கலப்பினங்கள்.
தமிழகத்தில் பெருமளவு காணப்படுவது ஜெர்சி வகைக் கலப்பினமே. வெண்மைப் புரட்சியின் ஒரு பகுதியாக 40 ஆண்டுகளுக்கு முன் அயல்நாட்டு மாட்டினங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்தியாவின் மலைப்பகுதிகளில் நிலவும் குளிரால், அந்தப் பகுதிகளில் வாழக்கூடிய ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாட்டினம் வளர்க்கப்பட்டது. அதேநேரம் வெயிலுக்குத் தாக்குப்பிடித்த ஜெர்சி வகை, தென்னிந்தியாவிலும் சமவெளிப் பகுதிகளிலும் காலூன்றியது. அதன் கலப்பினங்கள் இங்கே பரவலாகின.
இன்றைக்கு நாம் பார்க்கும் பெரும்பாலான செம்பட்டை நிறத்திலான மாடுகள், ஜெர்சி கலப்பின வகைகளே. அதற்குப் பிறகு, ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன், பிரவுன் ஸ்விஸ் ஆகிய வெளிநாட்டு மாட்டினங்களுடன் இந்திய மாடு வகைகள் கலப்பினம் செய்யப்பட்டன.
இந்தியக் கால்நடைப் பல்கலைக்கழகங்கள் வழியாக அறிமுகமான இந்த நடைமுறை, பின்னர்ப் பிரபலமடையத் தொடங்கியது. பால், இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடனே வெளிநாட்டு மாட்டினங்களின் கலப்பினம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
** வெப்பத்தைத் தாங்குதல், நோய் தடுப்பாற்றல், குறைந்த தீவனம், சொரசொரப்பான தீவனம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு மாடுகளும், அவற்றின் கலப்பினங்களும் முழுமையாகத் தாக்குப் பிடிக்கவில்லை.
** கலப்பினமாகப் பிறக்கும் புதிய மாடுகளின் இனப் பெருக்கத் திறனும் சற்றுக் குறைந்தே காணப்படுகிறது.
** கலப்பின மாடுகளை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் இது போன்று நிறைய சிக்கல்கள் உள்ளன. அவற்றில் பலவும் இன்றும் தொடரவே செய்கின்றன.
** கலப்பின மாடுகளுக்கு அதிக அளவில் தீவனமும் பல்வேறு வகைப்பட்ட தீவனமும் தேவை. அவை எளிதில் நோய் தாக்குதலைச் சந்திக்கக் கூடியவை.
** அவற்றின் கருத்தரிக்கும் விகிதம் குறைவு என்பதால் செயற்கை கருவூட்டலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறது.
மாடுகளிலும் பல்வேறு இனங்கள் கலந்த கலப்பின வகைகள் இந்தியாவில் இருக்கிறது.