தேன் எடுக்கும் முறை
தேன் எடுப்பதற்கு முன்பு முகக்கவசம், கையுறை சாதனங்கள் அணிந்து கொள்ள வேண்டும். மின்னும், கண்ணை உறுத்தும் ஆடைகள், வாசனை திரவியங்கள் தவிர்க்க வேண்டும். காலையில் தேனீக்கள் வெளியே சென்ற பின்னர், உள்ளே புகையை செலுத்தினால் அடையிலுள்ள பெரிய தேனீக்கள் வெளியேறி விடும். சிறிய தேனீக்கள் இருக்கும். அவை கொட்டாது.
பெட்டியில் வைக்கப்பட்டுள்ள 5 சட்டங்களையும் தனித்தனியாக வெளியே எடுத்து, அடையிலுள்ள தேனை, அது சேதமாகாத வகையில் பிழிந்தெடுக்க வேண்டும். தேனை பிழிய இயந்திரம் உள்ளது. அதை பயன்படுத்தலாம்.
எடுத்த தேனை வடிகட்டினால் விற்பனைக்கு தயார். தேனீ வகைகள்: இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை இத்தாலியத் தேனீக்கள். அதிக தேன் தருபவை.
இதிலிருந்து கிடைக்கும் தேன், நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. இவை வட இந்தியப்பகுதியில் வளர்க்கப்படுகின்றன. மரங்களின் கிளை, கொம்புகளில் காணப்படுபவை கொம்புத் தேனீக்கள். கொட்டும் தன்மை கொண்டவை.
மலைத் தேனீ, இயற்கையான சூழ்நிலைகள், காடு, மலை, பெரிய பெரிய கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் கூடு கட்டுபவை. இத்தாலி, கொம்பு, மலை தேனீக்கள் கொட்டக்கூடியவை.
கொசுத் தேனீ மிகச்சிறியது. மரப்பொந்து, பாறை இடுக்குகளில் கூடு கட்டுபவை. தமிழகத்தில் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கக்கூடிய தேனீக்கள் பெரும்பாலும் இந்திய தேனீக்களே.