தமிழர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். பசுவை செல்வத்தின் சின்னமாகவும் உற்பத்தியின் அடையாளமாகவும் வழிபடுதல் தமிழர்களின் வாழ்வியல் வழியாகும்.
மனிதன் பிறந்தது முதல் அவனுக்குப் பால் புகட்டப்படுகிறது. இறந்த பிறகும் எரித்த அல்லது புதைத்த இடத்தில் பால் ஊற்றப்படுகிறது. வாழ்விலும் சாவிலும் இணைபிரியாதது பால். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லா நேரங்களிலும் உண்ணப்படுகின்றன.
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பசு சாஸ்திரம், பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல கஜ சாஸ்திரம், அஸ்வ சாஸ்திரம் முதலான பல நூல்களில், அவற்றின் மரபுவழி சிகிச்சைக்காக என்னென்ன மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகப் பதிப்பித்து வைத்துள்ளார்கள்.
கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களில் சுமார் 70 சதவீதத்தினர் கால்நடைகளின் துணைப் பொருள்களைக் கொண்டே வாழ்க்கை நடத்துகின்றனர். உலகக் கால்நடையில் 20 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளது.
இன்றைக்கும் கிராமங்களில் பசு, கன்று ஈன்றவுடன் இளம் மூங்கில் தழைகளைத் தின்னக் கொடுப்பார்கள். அந்தத் தழைகளைத் தின்ற 3 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி கருப்பைப்பிடிப்பிலிருந்து தொடர்பை விலக்கி விட்டுவிடும். உடனே அப்படியே எடுத்துவந்து முருங்கை மரத்தின் அடியில் புதைத்து அதையும் உரமாக்கிவிடுவார்கள். ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உதவும்.
வயலில் நெல் அறுக்கின்றபோது ஒரு பழமொழி சொல்வார்கள், ""நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி காட்டுக்கு'' என்று. மாட்டுக்கு வைக்கோல் இடுவதைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். மாட்டின் கழிவு சாணம், மீன்களுக்கு உணவாகப் போடப்படுகிறது. மீன் மனிதனுக்கு உணவாகிறது. மனிதக் கழிவு மண்ணுக்கு உரமாகிறது.
கால்நடைகளுக்கு ஏற்படும் விஷக்கடிகளுக்கு அருகம்புல் சாற்றைக் கொடுப்பர். உயிர்ச் சங்கிலியின் ஒவ்வொரு தொடர்பும் இயற்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு இயற்கை மருத்துவம் தீர்வாக இருக்கும்.