சினைப் பருவத்தில் மாடுகளுகு ஏற்படும் பாதிப்புகள்
கறவை மாடு வளர்ப்பில் சினைப் பசுக்களுக்கு உரிய பராமரிப்பு செய்யாவிட்டால், கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு நஷ்டத்தை உருவாக்கும்.
இந்தப் பாதிப்புகளைத் தடுக்க சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், மிரட்டுதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது.
கருவிலுள்ள இளங்கன்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை கொடுக்க வேண்டிய தாலும், பால் உற்பத்திக்குத் தேவையானச் சத்துக்களை உடம்பில் சேமிக்க வேண்டியதா லும் சினை மாட்டுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும்.
ஏழாம் மாதம் சினை முடிந்ததும் சினைப் பசுவைத் தனிக் கொட்டகையில் வைத்து பராமரிப்பதுடன், 45 நாள் முதல் 60 நாள் வரை பால் வற்றச் செய்ய வேண்டும்.
45 நாள்களுக்குக் குறைந்த வற்றுக்காலம் உள்ள பசுக்களுக்கு மடி சரியான அளவு சுருங்காமலும், 60 நாள்களுக்கு மேல் வற்றுக் காலமுள்ள பசுக்களில் அதிக நாள்கள் பால் கறக்காமல் இருப்பதாலும் அடுத்த ஈற்றில் குறைவான அளவே பால் கிடைக்கும்.
அதன்படி, பால் வற்றுக் காலத்தில் தீவன அளவில் 50 சதம் குறைத்து ஒரேடியாக பாலை வற்றச் செய்ய வேண்டும்.
பகுதியளவு பாலைக் கறப்பதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் பாலைக் கறப்பதும் பால் வற்றக் கூடுதல் நாள்களாவதுடன், மடி நோயையும் உண்டாக்கக் கூடும்.
பால் வற்றச் செய்வதால் வளரும் கருவுக்கு தகுந்த ஊட்டச்சத்துகள் கிடைப்பதுடன், கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும்.
மடி சரியான விகிதத்தில் சுருங்கி அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும்.
தொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள், உணவு மண்டல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
தீர்வுகள்
சினை மாடுகளுக்கு இடவசதியும், தரை அமைப்பும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.
ஏழாவது மாத சினைக் காலம் முதல் கன்று ஈனும் வரை தனது உடலமைப்பை மெல்ல மாற்றத் துவங்கும்.
இந்தக் காலகட்டத்தில் மாடுகள் வழுக்கி விழுந்தாலோ அல்லது பலத்த அடிபட்டாலோ கருப்பைச் சுழற்சி ஏற்படவும், சில சமயங்களில் கன்று உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, கொட்டில் தரையை எப்போதும் வழுக்காமல் இருக்கவும், பாசி, சாணப் பற்று இல்லாமல் சுத்தமாக வைப்பதும் அவசியமாகும்.