எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும், கூடவே ஊடுபயிர் சாகுபடியும் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான வேளாண் வல்லுனர்களின் கருத்து.
காரணம் முக்கிய பயிர் கைவிட்டாலும், ஊடுபயிர் தாங்கி பிடித்து விடும் என்பதனால்தான்.
அந்த வகையில் வாழைக்கு ஊடுபயிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சியாக மேற்கொண்ட கொய்மலர் சாகுபடியால் இப்போது மாதம் ரூ.25 ஆயிரத்துக்கு குறையாமல் வருமானம் வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாரோடு வெட்டுகாட்டுவிளை. அங்கு வாழை தோட்டத்தில் ஊடுபயிராக ஹெலிகோனியா ரக கொய் மலர்களை சாகுபடி செய்கிறார் ரவிகுமார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொய்மலர் சாகுபடி நடைபெற்று வந்தாலும் அவை பெரும்பாலும் பசுமை குடிலில் வைத்தே வளர்க்கப்பட்டு வருகிறது.
அவர்களிலிருந்து மாறுபட்டு திறந்த வெளியில் கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பிலாழ்த்துகிறார் ரவிகுமார்.
’’எனக்கு சொந்தமாக நிலம் கிடையாது. குத்தகைக்கு நிலத்தை எடுத்துதான் விவசாயம் செய்கிறேன். 4 வருசத்துக்கு முன்னாடி வெறுமனே வாழை மட்டும்தான் போட்டுருந்தேன். குமரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தில் இருந்து விவசாயிகளுக்கு ஹெலிகோனியா பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
அதில் கலந்துகிட்ட பின்னாடி 75 சென்ட் வாழை தோட்டத்தில் வாழைக்கு ஊடுபயிராக ஹெலிகோனியாவை சாகுபடி செய்தேன்.நல்ல வருமானம் கிடைச்சுது. இப்போ படிப்படியா முன்னேறி ஒன்றரை ஏக்கரில் வாழைக்கு ஊடுபயிராக ஹெலி கோனியாவை சாகுபடி செய்றேன்.
என்னோட தோட்டத்தில் ஹெலி கோனியா ரகத்தில் 5 ரூபாய் செடியில் இருந்து 2000 ரூபாய் செடிகள் வரை பல்வேறு ரகங்களும் நடவு செஞ்சிருக்கேன். இப்போ என்னோட தோட்டத்தில் ட்ராபிக்ஸ், வேகினேரியா (ரெட்), வேகினேரியா (மஞ்சள்), அங்குஸ்டா, தக்கோமி, கென்யா ரெட் என்று 50-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.
இதில் சில ரகங்கள் தினசரி பூக்கும். சில வாரம் ஒரு முறையும், சில 6 மாதங்களுக்கு ஒருமுறையும் பூ பூக்கும். ஒரே ரகத்தை நடவு செய்தால் சந்தை வாய்ப்பு இருக்காது. அதே நேரத்தில் இப்படி பல ரகங்களையும் கலந்து நடவு செய்தால் ஆண்டு முழுவதும் சந்தை வாய்ப்பு இருக்கும்.
இதில் சந்தோசமான விசயம் என்னன்னா ஒரு தடவை செடிகளை வாங்கி நட்டு விட்டால் வாழையை போலவே பக்க கன்று விட்டு வளர்ந்து விடும். இதனால் செடி வாங்கும் செலவு ஒருமுறை மட்டுமே. காலப்போக்கில் நம் தோட்ட தேவைக்கு போக உபரியாக இருக்கும் செடிகளை விற்றும் சம்பாதிச்சுக்கலாம்.
தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது ஏக்கருக்கு 2500 செடிகள் வரை நடவு செய்யலாம். நான் முதலில் ஊடுபயிராக 75 சென்ட்டில் 1,225 செடிகளை நடவு செய்தேன். கொய்மலர்களை பொறுத்தவரை செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை 4 அடி இடைவெளி விட்டு நடவு செய்வது நல்லது. நடவுக்கு பின் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதே நேரத்தில் தண்ணீர் கட்டிவிடக் கூடாது.
நடவு செய்த 85-வது நாளில் செடியின் அடிப்பாகத்தில் சிறிய பாத்தி போல் அமைத்து ஒருகைப்பிடி அளவு பாக்டம்பாஸ் மற்றும் பொட்டாஷ் கலவையை போட வேண்டும்.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த உரத்தை தொடர வேண்டும். இடையிடையே கோழி எரு, ஆட்டு எருவையும் தூவி தண்ணீர் பாய்ச்சுவேன்.
நடவு செய்த 90 வது நாளில் பூ பூக்கத் துவங்கி விடும். மொட்டு விட்டதிலிருந்து 15-வது நாளில் பறிக்க ஆரம்பித்து விடலாம். ஒரே ஆண்டில் ஒவ்வொரு செடியில் இருந்தும் குறைந்தது ஒன்பது பக்க செடிகள் முளைத்து வந்து விடும். இப்போது என்னோட ஒன்றரை ஏக்கர் தோட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள் வரை நிக்குது.
இதனால் வருடம் முழுவதும் பூ கிடைக்கும். பல ரகங்களும் கலந்து கட்டி நிற்பதால் வியாபாரிகள் கேட்கும் பூவை கொடுக்க முடியும்.
ஹெலிகோனியாவில் டெம்ரஸ், சொர்ணம் கோல்ட், செக்ஸிபிங் ரகத்திற்கு அதிகபட்சமாக 60 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. ட்ராபிக்ஸ், ஆங்குஸ்டா ரகங்கள் குறைந்தபட்சம் 8 ரூபாய் வரையும் விலை கிடைக்கிறது.
அறுவடை செய்த கொய்மலர்களை திருவனந்தபுரம், பெங்களூர், டெல்லி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அழகு பூவுக்காக சந்தைபடுத்தி வருகிறேன். தமிழகத்தில் வாழை விளையும் மண் வளம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த கொய்மலர்களை சாகுபடி செய்யலாம். சென்னை போன்ற பெருநகரங்களை ஒட்டியுள்ள விவசாயிகள் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு சாகுபடி செய்யலாம்.
எனக்கு இப்போது செலவெல்லாம் போக ஹெலி கோனியாவின் மூலம் மாதம் 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சொந்த நிலம் கூட இல்லாமல் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வந்த நான் ஹெலிகோனியா கொடுத்த வாழ்க்கையின் மூலமாக வில்லுக்குறி பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நர்சரியும் நடத்தி வருகிறேன்.
குமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை அதிகாரிகளும் எனக்கு வேண்டிய தகவல் தந்து உதவுகின்றனர். ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சியிலும் ஒவ்வொரு ஆண்டும் கலந்து வருகிறேன். இப்போது என் தோட்டத்தில் வாழைதான் ஊடுபயிர். ஹெலிகோனியா தான் பிரதானப் பயிர்” என்றார் ரவிகுமார்.