இறவையில் எப்போது நிலக்கடலை சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம் தெரியுமா?

 |  First Published Mar 6, 2017, 12:59 PM IST
If groundnut cultivation in irrigated when you know you can get more profit



இறவையில் தைப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.

உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கடலை நம் நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப்பயிர்.

Latest Videos

undefined

நம் நாட்டில் ஆண்டு முழுவதும் நிலக்கடலை இரு பயிர் சுழற்சி முறையால் மார்ச், அக்டோபரில் அறுவடை செய்யப்படுகிறது.

2014–15 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2.89 லட்சம் ஹெக்டேரில் 9.31 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் நிலக்கடலை ஜூலை – ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்), ஜனவரி – பிப்ரவரியில் (தைப்பட்டம்) விதைக்கப்படுகிறது.

இறவையில் தைப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.

ரகங்கள்:

டி.எம்.வி – 7, கோ (ஜிஎன்4), விஆர்ஐ – 3, வி.ஆர்.ஐ (ஜிஎன்) – 5, வி.ஆர்.ஐ (ஜிஎன்) –6.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை 3 அல்லது 4 முறைகள் நன்கு உழ வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் அல்லது மக்கிய தென்னை நார்கழிவு இட வேண்டும்.

10 முதல் 20 சதுர மீட்டர் அளவுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ விதை தேவை. (பெரிய விதை கொண்ட ரகங்களுக்கு 15 சதவீதம் கூடுதலாக)

விதைநேர்த்தி:

1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை கலக்கவும். பின்னர் விதைகளுடன் ஒரு ஏக்கருக்கு தலா ரைசோபியம் (கடலை) ஒரு பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒரு பாக்கெட் ஆகிய உயிர்உரங்களை ஆறிய, ஆடையில்லாத அரிசிக்கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

உரமிடல்:

மண்பரிசோதனை முடிவுகளின்படி உரமிட வேண்டும். மண் ஆய்வு செய்ய இயலாத நிலையில், பொதுப்பரிந்துரையின்படி உரமிடலாம்.

ஒரு ஏக்கருக்கு அடியுரம் யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ இட வேண்டும். இத்துடன் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.

நிலக்கடலை நுண்ணூட்டக்கலவை 5 கிலோவுடன் 20 கிலோ மணல் கலந்து சீராக தூவ வேண்டும்.

விதைப்பு:

வரிசை வரிசை 30 செ.மீ., இடைவெளியும், செடிக்குச்செடி 10 செ.மீ., இடைவெளியும் இருக்கும்படி ஒரு குழிக்கு 1 விதை வீதம் 4 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும்.

விதைத்த 20–30 நாட்களில் களைகளை பொருத்து, களை முளைத்த பின்னர் தெளிக்கக்கூடிய களைக்கொல்லி இமாசிதிபர் ஒரு ஏக்கருக்கு 300 மிலி என்ற அளவில் தெளிக்கலாம்.

களைக்கொல்லி உபயோகிக்கவில்லை எனில், விதைத்த 20 ம்நாள் மற்றும் 30 ம்நாள் களைக்கொத்தி கொண்டு களை எடுக்க வேண்டும்.

மேலுரமிடல்:

விதைத்த 20, 45 ம்நாட்களில் யூரியா ஒரு ஏக்கருக்கு 5 கிலோ, பொட்டாஷ் ஏக்கருக்கு 12.5 கிலோ மேலுரமாக இட வேண்டும்.

விதைத்த 40–45 ம்நாட்களில் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ வீதம் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

நீர்மேலாண்மை:

நிலக்கடலைக்கு முளைக்கும் பருவம், பூக்கும் பருவம், காய் உருவாகும் பருவத்தில் நீர்பாசனம் மிகவும் இன்றியமையாதது. விதைத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

முளைப்புப் பருவத்தின் போது மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து ஒன்று அல்லது இரண்டு முறைகள் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கும், பிறகு பூக்கும் பருவத்திற்கு முன்பும் இருமுறைகள் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

அறுவடை நுட்பங்கள்  :

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல், மேல்மட்ட இலைகள் மஞ்சளாதல் முதிர்ச்சியைக் குறிக்கும். காலஅளவைப் பொருத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி, காய்களைப் பறிக்க வேண்டும்.

ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருந்தால், அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கும். அப்போது செடிகளைப் பிடுங்கி அறுவடை செய்யலாம்.

இந்தத் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து நிலக்கடலையில் நல்ல மகசூல் பெறலாம்.

click me!