செஞ்சந்தன மரம் சாகுபடி
செஞ்சந்தன மரம் இறவை, மானாவாரி இரண்டுக்கும் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 400 மரங்கள் வளர்க்கலாம். 20 ஆண்டுகளில் பெரும் மகசூல் கிடைக்கும்.
சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற மரம் என்றுகூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம். பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர் போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம்.
ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம்.
விதைகளை விதைப்பது; நாற்று தயாரித்து நடவு செய்வது; போத்து நடவு என மூன்று வழிகளில் இம்மரத்தை நடவு செய்யலாம் என்றாலும், கடைசி இரண்டு முறைகள்தான் சிறந்தது.
10 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும்.
நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம்.
அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும்.
இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்
இந்த மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் ஆன ஒரு மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை விலை போகும்.
சந்தன மரத்தைப் போல இம்மரங்களை வெட்டுவதற்கு தனி அனுமதி எல்லாம் வாங்கத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போலவே வெட்டி விற்று விடலாம்.