கொத்தமல்லியை சொட்டுநீர் பாசனத்தில் கூட சாகுபடி செய்து லாபம் அள்ளலாம்…

First Published Sep 9, 2017, 12:47 PM IST
Highlights
Coriander can also be profitable even in drip irrigation ...


கொத்தமல்லி சாகுபடி

நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு, 10 டன் தொழு உரம் இட்டு, மீண்டும் உழுத பின், மேட்டுப் பாத்திகள் அமைத்து, பாத்தியின் மீது விதைகளைப் போட்டு, மண்ணை மூட வேண்டும்.

ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ கொத்தமல்லி விதைகள் தேவைப்படும். கொத்தமல்லியை, சொட்டு நீர்ப் பாசன முறையிலும் பயிரிடலாம். மானாவாரியாக, கொத்தமல்லியை சாகுபடி செய்தால், ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைப்பதற்கு முன், ‘பொட்டாஷியம் – டை – ஹட்ரஜனை’ ஒரு லிட்டர் நீருக்கு, 10 கிராம் வீதம் கலந்து, விதைகளை, 16 மணி நேரம் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதன்பின், விதைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும்.அப்போதுதான், விதைகள் முளைக்கும்.

நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்திலும், கார அமிலத் தன்மை, ஆறு முதல் எட்டு வரை இருக்கும் மண் வகையிலும், கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம். 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில் வளரக்கூடிய இவற்றை, அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.

விதை விதைத்த, 10முதல் 15 நாட்களுக்குள், கொத்தமல்லிச் செடிகள்முளைத்து விடும். விதைத்த மூன்றாம் நாளும், அதன்பின், வாரம் ஒரு முறையும் செடிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 30வது நாள், தழைச்சத்து அடங்கிய மருந்தைத் தெளிக்க வேண்டும்.

கொத்தமல்லி சாகுபடியில், அசுவனிப்பூச்சி தென்பட்டால், ‘மீதைல் டெமட்டான்’ மருந்தையும், பயிர்களில் வேர் அழுகல் நோய் தென்பட்டால், ‘ட்ரைக்கோடர்மாவிரிடி, சூடோ மோனஸ், அசோஸ்பைரில்லம்’ போன்ற மருத்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய் தாக்கிய செடிகளை, வேரோடு பிடுங்கி விடுவது நல்லது. சாம்பல் நோயை கட்டுப்படுத்த, வேப்பெண்ணெய் மற்றும் கந்தகப் பொடி அல்லது பஞ்ச காவ்யா கரைசலையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை, களையெடுக்க வேண்டும். மொத்தத்தில், 30 முதல் 45 நாட்கள் வரை வளர்ந்த கொத்தமல்லிச் செடிகளிலிருந்து, ஏக்கருக்கு, 3 முதல், 4 டன் வரை கொத்தமல்லித் தழைகளையும், 90 நாட்கள் வரை வளர்ந்த செடிகளிலிருந்து, 200 முதல் 300 கிலோ வரை, கொத்தமல்லி விதைகளையும் அறுவடை செய்யலாம்.

click me!