வறண்ட கோடையில் உங்கள் மல்லிகை இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை பார்க்கலாம். பூக்களும் மஞ்சள் நிறமாகி வெளுத்துப் போகும். இதற்கு காரணம் செஞ்சிலந்தி தாக்குதல்.
செஞ்சிலந்தி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்து தெரிந்து கொண்டு அவற்றை ஒழிக்கலாம்.
செஞ்சிலந்தி தாக்குதலின் அறிகுறிகள்:
1.. பாதிப்பு முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி இளம் இலைகளுக்கு பரவும்.
2.. இலைகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும்.
3.. பாதிக்கப்பட்ட மல்லிகை இலைகளை உற்று நோக்கினால் மெல்லிய நூலாம்படையும் அதனுள் சிவப்புநிற சிறிய பூச்சிகள் மெதுவாக நகர்வதையும் காண முடியும்.
4.. உருப்பெருக்கி கொண்டு பார்த்தால் அப்பூச்சிகள் எட்டுக்கால்கள் கொண்டனவாக இருப்பதைக் காண இயலும்.
5.. இப்பூச்சிகள் செவ்வுண்ணி என்றும் அழைக்கப்படும்.
6.. தாக்குதல் தீவிரப்பட்டால் இலைகள் முற்றிலும் வெளுத்து காய்ந்து கீழே உதிர்ந்துவிடும்.
7.. வறண்ட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தி தாக்குதல் விரைந்து பரவும்.
செஞ்சிலந்திகளை கட்டுப்படுத்தும் முறைகள்:
1.. மல்லிகை செடியில் செஞ்சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று கிராம் வீதம் நனையும் கந்தகம் மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்கலாம்.
2.. பயிரின் வளர்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்துக் கரைசல் தேவைப்படலாம். இலையின் அடிப்புறமும் படும்படி தெளிக்க வேண்டும்.