உரிய பருவத்தில் அதற்குரிய பயிரை விதைத்து விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற, மண் பரிசோதனை என்பது மிகவும் அவசியமான ஒன்று.
இந்த ஆய்வுக்காக, மண் சேகரிக்கும் முறை குறித்து மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தால் பருவத்துக்கேற்ற பயிர்களை பயிர்செய்து லாபமடைந்து வந்தனர்.
ஆனால், நாளடைவில் ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை விஷமாக மாறியுள்ளது. இதனால் போதிய அளவு விளைச்சலும் இல்லாமல், விளைவிக்கும் பொருள்களில் போதிய லாபமும் இல்லாமல் விவசாயிகள் நலிவடைந்து வருகின்றனர்.
தங்கள் நிலங்களின் மணலை ஆய்வுக்கு உள்படுத்தி, எந்தப் பயிரை பயிரிடலாம், எந்த வகையான உரம் இட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கு மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது.
மண் சேகரிப்பு வரைமுறை:
ஆய்வுக்காக மண்ணை சேகரிப்பதில் சில வரைமுறைகள் உள்ளன. பயிர் அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரே நிலத்தில் மண் வெவ்வேறாக இருந்தால் அந்த பகுதிகளில் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.
மேட்டுப் பகுதி, தாழ்வான பகுதியில் தனித்தனியாக மண் சேகரிக்க வேண்டும். வரப்பு வாய்க்கால் அருகிலும், எடுக்குழி அருகிலும், மர நிழலில் உள்ள இடங்களிலும் மண் மாதிரி எடுத்தல் கூடாது.
மண் மாதிரி எடுக்கும் இடத்தில் உள்ள இலை, சருகு, புல் ஆகியவற்றை அதன் மேல் உள்ள மண்ணை ஒதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். பயிருக்கு ஏற்றவாறு மண் மாதிரி எடுக்கும் ஆழம் வேறுபடும்.
நெல், சோளம், கம்பு, கடலைப் பயிர் ஆகியவற்றுக்கு அரை அடி ஆழமும், மிளகாய், பருத்தி, கரும்பு, வாழை, காய்கறிகளுக்கு முக்கால் அடி ஆழமும், தென்னைக்கு 3 அடி ஆழமும் (ஒரு அடி ஆழத்துக்கு ஒரு மண் மாதிரியும் எடுக்கலாம்) பழ மரங்களுக்கு 4 முதல் 5 அடி ஆழம் வரை மண் சேகரிக்க வேண்டும்.
மண் சேகரிக்க வெட்டப்படும் குழியை ஆங்கில எழுத்தான "வி' வடிவில் அமைக்க வேண்டும். குழியின் இரு ஓரங்களிலும் மண்வெட்டியின் தகட்டால் மேலிருந்து கீழ்வரை மண்ணை சுரண்டி சேகரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மண்ணை சேகரித்து சுத்தமான பிளாஸ்டிக் அல்லது கோணியின் மீது கொட்டி அதை நான்கு சம பாகமாக கலந்து, அரை கிலோ மண்ணை எடுத்து துணிப்பையில் போட்டுக் கட்ட வேண்டும்.
மண் ஈரமாக இருந்தால், நிழலில் உலர்த்தி நான்கு சமபாகமாக பிரித்து மாதிரி எடுக்க வேண்டும்.
மண் மாதிரியுடன் விவசாயியின் பெயர், கிராமம், வீட்டு முகவரி, நிலத்தின் பெயர், அடுத்து பயிரிடப் போகும் பயிர், பாசனப் வசதி, இதற்கு முன் பயிரிடப்பட்ட பயிர் குறித்த விவரம் உள்ளிட்ட விவரங்களை மண் ஆய்வுக் கூடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுபோன்ற முறையில் மண் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் கொடுத்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.