அறுவடைக்குப் பின் இந்த தொழில்நுட்பத்தை கடைப்பிடித்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும்…

 |  First Published Jan 31, 2017, 12:10 PM IST



அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தைக் கடைபிடிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

உலகில் மாங்காய் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் 15,200 ஹெக்டேர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது செந்தூரா, அல்போன்சா போன்ற மாங்காய்கள் அறுவடை தொடங்கும்.

Tap to resize

Latest Videos

மாங்காய் அறுவடையானது, மார்ச் இறுதியில் தொடங்கி ஜூன் மாதத்தில் நிறைவு பெறும். அறுவடையானது அதன் ரகங்களுக்கு ஏற்ப மாதங்கள் மாறுபடும்.

5 முதல் 15 ஆண்டுகள் வயதுடைய மாங்காய் மரங்களில் ஒரு ஹெக்டேருக்கு 7 முதல் 10 டன் மகசூலும், 16 முதல் 20 வயதுடைய மாங்காய் மரங்களில் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் மகசூலும் கிடைக்கின்றன.
 
அறுவடைக்கான அறிகுறிகள்:

பழுக்கும் தன்மை கொண்ட மாங்காயின் காம்புகள் தளர்ச்சி அடைந்து காணப்படும். அதன் தோலின் நிறம் கரும் பச்சை நிறத்திலிருந்து லேசான பச்சை நிறத்திற்கு மாறிக் காணப்படும். சதைப்பற்று வெண்மை கலந்த பச்சை நிறத்திலிருந்து லேசான மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்.

மாங்காய் அறுவடை செய்ய வேண்டிய முறைகள்:

மாங்காயின் காம்பை 10 செ.மீ.-இல் இருந்து 20 செ.மீ. வரை விட்டு, அறுவடை செய்யும் கருவியான கத்திரிக்கோலால் கட் செய்ய வேண்டும். இதனால், மாங்காயின் பால், அதன் தோல் மீது விழாமல் பாதுகாக்கப்படும். பால், தோல் மீது படும் இடம் கரும் புள்ளியாக மாறி, பழம் கெட்டுவிடும்.

அறுவடை செய்யும் போது பழங்கள் கீழே விழுந்து காயம் அடையாமல் இருக்க வலையுடன் கூடிய அறுவடை செய்யும் கருவியைப் பயன்படுத்த வேண்டும். அறுவடை செய்யப்பட்ட காய்களை நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நிழல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும். சாக்குப் பை, கூடைகள் ஆகியவற்றில் மாம்பழங்களை வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதால் பழங்களில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பிளாஸ்டிக் கிரேடில் பழங்களை வைப்பதன் மூலம், பழங்கள் மீது ஏற்படும் காயத்தைத் தடுக்கலாம்.
 
அறுவடைக்கு பின் மேற்கொள்ள வேண்டிய செய்நேர்த்தி முறைகள்:

சரியான தருணத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்களை தரம் பிரித்து, விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் போது பிளாஸ்டிக் கிரேடுகளில் சரியான முறையில் பழங்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும். விற்பனைக்கு ஏற்ப பழம் பழுக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துதல் வேண்டும்.

ஏற்படும் இழப்புகள்:

மாம்பழத்தில் அழுகல் நோய் தாக்குதல் அதிகமாகிறது. முதிர்ச்சி அடையாத பழங்களை அறுவடை செய்வதால், மாங்காய் தண்டு அழுகல் மூலம் பழங்கள் சேதமடைகின்றன. பழங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சரியான பேக்கிங்கில் பழங்களை அடுக்காமல் இருந்தால், காயங்கள் ஏற்பட்டு, அதிக சேதாரம் அடைகின்றன. மாம்பழங்களை சரியான தருணத்தில் அறுவடை மேற்கொள்ளாமல் இருந்தால், அவை பழுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் 15 முதல் 20 சதவீதம் சேதம் அல்லது இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
நிவர்த்தி செய்யும் முறைகள்:

சரியான பருவத்தில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். காலை நேரங்களில் மாம்பழங்களை அறுவடை செய்து, நிழல் பகுதியில் சேகரித்து வைக்க வேண்டும். உரிய பேக்கிங் முறைகளைக் கையாண்டு, ஒரே வரிசையில் ஒரே தரத்தில் பழங்களை அட்டை பெட்டிகளில் அடைக்க வேண்டும்.

மாங்காய்களை காம்புடன் அறுவடை செய்தவுடன் அதில் வடியும் பாலானது அதன் தோல் மீது படாமல் இருக்க காம்புப் பகுதி கீழ் புறமாக இருக்கும்படி அதற்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வலை பின்னப்பட்ட மூங்கில் தட்டில் 10 நிமிஷம் வைக்க வேண்டும். இதனால், மாங்காய் பால் பழங்களின் மீது படாமல் தவிர்ப்பதால் “சேப் பர்ன்’ என்ற பழ அழுகளில் இருந்து பழத்தைப் பாதுகாக்க முடியும்.

மாம்பழங்களை பேக்கிங் செய்யும் முறைகள்:

40*30* 10 செ.மீ. அளவு கொண்ட அட்டைப் பெட்டிகளில் (காற்றோட்ட வசதி உள்ளவை) மாம்பழங்களை ஒரே வரிசையில் ஒரே அளவிலான ஒரே தரம் உள்ளவைகளை அடுக்க வேண்டும்.

இத்தகைய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் 40 சதவீத இழப்பைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், 10 முதல் 20 சதவீதக் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.

click me!