ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கடிக்காத உயிர் வேலி:
‘‘கிளுவை, கிளா, கள்ளி என்று ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவாறு உயிர்வேலிகள் நிறையவே இருந்தன. ஆனால், பல பகுதிகளில் இதன் பயன் தெரியாமல் கைவிட்டுவிட்டனர். விவரம் தெரியாமல் அழித்துவிட்டு, கடன் வாங்கி கம்பி வேலி போடுபவர்களும் உண்டு.
பல மாவட்டங்களில் கிளுவை மரச்செடியைத்தான் இப்போதும் கூட பரவலாக பயன்படுத்தி வருகின்றனார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலும் பரவலாக இதைப் பார்க்க முடியும். சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளி வேலியை பார்க்கலாம்.
கிளுவையைப் பொறுத்தவரை குறிப்பாக மானாவாரி நிலத்தில் இது அருமையாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலத்தில் வளராது. இதை நடவு செய்வதற்கு ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்றது. பருவமழைக் காலத்தில் நடவு செய்தால் உடனே வேர் பிடிக்கும்.
ஆடு, மாடுகள் கடிக்காது (வெள்ளாடு மட்டும் கடிக்கும்). மண் அரிப்பைத் தடுக்கும், நிரந்தர வேலியாகவும் இருக்கும். தூதுவளை, கோவைக்காய், சிறுகோவை போன்றவற்றை இதன் மீது படரவிட்டு, வருமானம் பார்க்கலாம்.
கம்பி வேலி, கல்வேலி என்று செலவு பிடிக்கும் சமாச்சாரங்களைக் காட்டிலும், கிளுவை போன்ற உயிர் வேலிகளே மிகச் சிறந்தவை.
கிளுவைக் குச்சிக்காக பெரிதாக அலையத்தேவையில்லை. அக்கம் பக்கத்தில் கூட விசாரித்தால் யாராவது ஒரு விவசாயி அதைக் கடைபிடித்துக்கொண்டிருப்பார். அவரிடமே கூட விதைக்குச்சிகளைக் கேட்டுப் பெறமுடியும்.