இயற்கை உரம்:
உணவின் மூலம், மருந்து மாத்திரையின்றி, இயற்கை முறையில் சத்தைப் பெறுவது. இத்தகைய இயற்கை உரத்தை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். அதிக ஆற்றலைத் தரக்கூடியது இந்த உரங்கள்.
நெல்லிலிருந்து, அரிசியிலிருந்து கழிக்கப்பட்ட தவிடு, உமி, கெட்டுப்போன காய்கறிகள், அழுகிய வெங்காயம், வெட்டி எறியப்பட்ட காய்கறிக் கழிவுகள், பழம் மற்றும் காய்கறித் தோல்கள் இறைச்சியின் எலும்புகள், மீன், கழிவுகள், சாப்பிட்ட வாழை இலைகள், மரங்களிலிருந்து உதிர்ந்து விழும் இலை, தழைகள், தக்காளி தோல்கள், கறிவேப்பிலை கழிவுகள், காய்ந்த மாலைகள், மலர்கள், வைக்கோல் கழிவுகள், கூட்டிய குப்பைகள், ஆடு, மாடு, கோழி, கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மக்க வைத்துக் கிடைக்கப் பெறுவதே இயற்கை உரம்.
பசுந்தழை உரப் பயிர்களின் வகைகள்:
கொடிபூவரசு, கிளிரிசிடியா, நெய்வேலி காட்டாமணக்கு, எருக்கு, ஊமத்தை, துத்தி, காடாமணக்கு, வாதநாராயணன், அடாதொடா, நொச்சி, காக்கட்டான், பாலைக்கொடி, கோவை, பூவரசு, புங்கன், வேம்பு, மயில்கொன்றை, தூங்குமூஞ்சி, கொன்றை, மந்தாரை, கல்யாணமுருங்கை, கடம்பு, நாவல், இலுப்பை, மருது.
பசுந்தாள் உரப் பயிர்களின் வகைகள்:
சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சீமை அகத்தி, நரிப்பயறு, அவுரி, கலப்பகோனியம், கொத்தவரை, பயறுவகைகள். ஆகவே பாரம்பரிய விவசாயத்தில் நல்ல அம்சங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
தழை உரத்தின் அவசியம்:
நம் பாரம்பரிய விவசாயத்தில் நெல் சாகுபடி என்றால் தழைகளை நிறைய வயலுக்கு இட்டு, சேற்றில் அமுக்கி, உழுது, 15 நாட்கள் மக்கவிட்டு, பரம்படித்து பின்பு தான் நடவு செய்யவேண்டும்.
இன்றைய முன்னேற்ற விவசாயத்தில் இந்த தழை உரம் இடும் சாகுபடி பணி இடம்பெறுவதே இல்லை. முன்காலத்து நெல் விவசாயிகள் போன்றே நாமும் புறம்போக்குகளில் ஏரிக்கரைகளில், பாதை ஓரங்களில் முளைத்திருக்கும்.
எருக்கு, ஆவாரை, அவுரி, போன்ற செடிகளை வெட்டி தழை உரமாக சேகரித்து வயலில் போடவேண்டும். பூவரசு, வாதநாராயணன், வேம்பு, ஆடோதொடை, கிளைரிசிடியா செடி, ஐபோமியா (ரயில்வே காடாமணி) மற்றும் பக்கத்து காடுகளிலுள்ள செடிகள், கொடிகள் மரங்களின் தழைகளை சேகரித்து அல்லது வண்டி வண்டியாக விலைக்கு வாங்கி, நடவு வயலுக்கு இடுவதை, ஒரு முக்கிய சாகுபடி பணியாக கொள்ள வேண்டும்.
தழை உரம் போட்டு விவசாயம் செய்து பாருங்கள். இனி மேலாவது நம் விவசாயிகள் அனைவரும் தழை உர அவசியத்தை உணர்ந்து கட்டாயமாக தழை உரம் இடும் சாகுபடி பணியை திரும்பவும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
பசுந்தாள் உரம்:
போதிய நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் நெல் வயலிலேயே நடவு செய்ய 70 அல்லது 80 நாட்களுக்கு முன்பே நிலத்தை உழுது 60 நாள் வயதுக்குட்டபட்ட ஒரு பசுந்தாள் உர விதைகளை விதைத்து பயிராக்கி, நெல் நடுவதற்கு 15-20 நாட்கள் முன்பாக உழுது மண்ணில் அமுக்கி தழை உர தேவையை பூர்த்தி செய்துகொள்வது நெல் விவசாயத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
சாதாரணமாக சணப்பை, நரிப்பயறு, சஸ்பேனியா, தக்கைப்பூண்டு போன்ற 40-60 நாள் வயது உடைய பயிர்களை, பசுந்தாள் உரமாக பயிரிடலாம். காவிரி டெல்டா பகுதி வயல்களில், டிசம்பர் ஜனவரியில் நெல் அறுப்புக்கு ஒரு வாரம் முன்பு உளுந்து + காவாளையின் (பசுந்தாள் உரச்செடி) விதைகளை கலந்து விதைக்கலாம்.
நெல் அறுவடைக்குப்பின் வயலில் உள்ள எஞ்சிய ஈரத்தைக் கொண்டு உளுந்து வேகமாக வளர்ந்து பயிர் முற்றி 60 நாளில் உளுந்து செடியை மட்டும் கையால் பிடுங்கி அரித்து விடவேண்டும்.
மெதுவாக வளர்ந்து வரும் காவாளை செடி வயலிலேயே மீதம் இருக்கும். குறைந்த ஈரம், கோடை மழை உதவி கொண்டு நன்கு, அடர்த்தியாக வளர்ந்து நிறைய தழை பிடித்திருக்கும்.
ஜூன், ஜூலை மாதங்களில் அடுத்த நெல் பயிரிட தொழி தயார் செய்யும்போது, இந்த காவாளை செடிகளை அப்படியே உழுது மண்ணில் அமுக்கி தழை உரமாக உபயோகப்படுத்தலாம். கோடை காலத்தில் தரிசு நிலத்தையும் திறமையாக பயன்படுத்தி நமக்கு அதிகம் விளையக்கூடிய பொன்விளையும் பூமியாக செய்யலாம்.