பண்ணைக்குட்டைகள்
பயிரை விளைவிக்கும் போது அதற்கு தேவையான உரத்தை இடுவது மிகவும் முக்கியம். அதே போல் அந்த பயிருக்கு தேவையான நீரை குறைவில்லாமல் பாசனம் செய்வதும் அதை விட முக்கியம்.
இந்த இரண்டுக்கும் உதவுவதே பண்ணைக்குட்டைகள் என்ற அமைப்பு ஆகும். வயல்வெளிகள் தோறும் விவசாயிகள் சிறிய பண்ணைக்குட்டை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் அதில் நீரையும் சேமிக்கலாம்.
அதையே சமயங்களில் விவசாயக் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் உரசேமிப்பு குழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பண்ணைக் குட்டை அமைப்பு
ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 8 க்கு 5 மீட்டர் அல்லது 10 க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ, அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியில் இந்த குழி வெட்ட வேண்டும்.
இந்த குழிகளை தோண்டும் போது அந்த நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணில் பெரும்பகுதியை வயல்பரப்பினை பலப்படுத்தவும், தோண்டப்படும் பண்ணைக் குட்டையின் கரையை பலப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டையானது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும்.
கோடையில் மழை பெய்யும் போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக இந்த குழிக்கு வந்து தேங்கும். இப்படி பண்ணைக்குட்டையில் தேக்கப்படும் நீரை தக்க சமயத்தில் எடுத்து பயன்படுத்தலாம்.
அதாவது, மானவாரி நிலங்களுக்கு முதல் போக சாகுபடியில் அதாவது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் எருவிட வேண்டியது இருக்கும். அதனை கருத்தில் கொண்டு இந்த குழியில் ஜனவரியிலிருந்து ஜூன் வரை உள்ள காலத்தில் விவசாய கழிவுகளை சேமித்து மக்க வைத்து உரமாக மாற்றலாம்.
பின்னர் ஜுன் மாதவாக்கில் இந்த உரத்தை எடுத்து பயிர்களுக்கு அளிக்கலாம். அதே போல் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை மழை பெய்யும் காலத்தில் விழும் மழை நீரை இந்த பண்ணைக்குட்டையில் தேக்கி வைத்து பயன்படுத்தலாம்.