மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்.
அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது.
பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன.
இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது.
இது போன்ற நிலையில் விவசாய கழிவுகளை மக்கிய உரமாக மாற்ற " வயல் தோறும் எருக்குழி" என்ற அமைப்பை நிறுவலாம். இது பயிர்களுக்கு தேவையான மக்கிய உரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பாக இருக்கிறது.