சோளம் தண்டுப்புழு
இப்புழு பொதுவாக ஒரு மாதப் பயிரைத் தாக்க ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட பயிரில் நடுக்குருத்து வாடி காணப்படும். இலைகளில் வரிசையாக துவாரங்கள் காணப்படுவது இப்புழு தாக்குதலின் அறிகுறி. இதன் தாக்குதல் அறுவடை வரையிலும்கூட காணப்படும். வளர்ந்த பயிரில் இதன் தாக்குதல் இருக்குமானால், அப் பயிர்கள் தங்கள் வீரியத்தை இழந்து, சிறிய பலமில்லாத சரியாக மணிப்பிடிக்காத கதிர்களைக் கொடுக்கும்.
undefined
சோள குருத்து ஈ
சோளம் மற்றும் மக்காச்சோளப் பயிரில் முதலில் வரக் கூடிய ஒரு முக்கியமான பூச்சி இதுவாகும். இப் பூச்சி ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை உள்ள பயிர்களைத் தாக்கும். இந்த ஈ இளம் பயிர்களின் நடுக்குருத்தை துளைத்துக் கொண்டு உண்பதால் இந்த பயிரின் நடுக்குருத்து வாடிச் சாய்ந்துவிடும். இந்தக் குருத்தை மெதுவாக இழுத்தால் கையோடு வந்துவிடும். சில சமயங்களில் இப் பூச்சியின் தாக்குதல் 86 சதவீதம் வரை இருக்கும்.
சோளம் கதிர் நாவாய்ப்பூச்சி
இளம் பருவ பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் சோளக் கதிரில் மணிகள் பால் பிடிக்கும் தருணத்தில் சாற்றை உறிஞ்சி உண்பதால், கதிர்கள் சாவியாகி விடுகிறது. இதனால் 15 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சோள மணிகளில் இப் பூச்சிகள் ஏற்படுத்திய சிறு துவாரங்களினால் சோளத்தின் தரம் குறைகிறது.
கதிர் ஈ
இந்தப் பூச்சி பொதுவாக சோளம் பயிரிடப்படுகின்ற எல்லா இடங்களிலும் காணப்படும். சோளத்தைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இப் பூச்சியின் இளம் புழுக்கள் சோளப் பூக்களைச் சேதப்படுத்துவதால், சோளம் மணிப் பிடிக்காமல் சாவியாகிவிடுகிறது.