மடக்குப் புழு
தற்போதைய பருவத்தில் இலை மடக்குப் புழு நெற்பயிரைத் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையுடன் இருந்து கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும்
மடக்குப் புழு தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள்
இளம் புழு தன் உமிழ் நீர் கொண்டு மெல்லிய பட்டு நூல் போன்ற இழைகளால் இலையின் ஓரங்களைப் பிணைத்து அல்லது இலையின் நுனிப்பகுதியை அடிப் பகுதியுடன் மடக்கி இணைத்து அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் அப்பகுதி வெண்மையாக மாறிவிடும்.
அதிக அளவு பாதிக்கப்பட்ட பயிரில் இலைகள் வெண்மையான சருகு போலக் காணப்படும். இதனால் இலைகள் ஒளிச்சேர்க்கை செய்வதும் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி விடும். இதுபோல் பல வகை பாதிப்புகள் ஏற்படும்.
பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்
** வயல்களில் உள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை விளக்குப் பொறி அமைக்க வேண்டும்.
** நிழல்படும் இடங்களில் தாக்குதல் அதிகமாவதால் கூடுதல் பாதுகாப்பு அவசியம்.
** எம்டியு 3 ரகம் இப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி தழைச்சத்து உரத்தினை 2-3 முறை பிரித்து இட வேண்டும்.
** டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி ஒரு ஹெக்டேருக்கு 5 சிசி (கனசதுர சென்டிமீட்டர்) வீதம் நடவு நட்ட 37, 44, 51 ஆவது நாள் மூன்று முறை வெளியிட வேண்டும்.
** பொருளாதாரச் சேதநிலையை அடைந்தவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.
** குளோர்பாரிபாஸ் 20 இசி - 1250 மிலி, டைகுளோர்வாஸ் 76 எஸ்.சி - 625 மிலி,
** ப்ளுபென்டிமைடு 39.35 எஸ்.சி - 50 மில்லி லிட்டர், கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்பி 1000 கிராம், அசிப்பேட் 76 எஸ்.பி - 625 கிராம் ஆகியவை இட வேண்டும்.
** இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் நெற்பயிரைச் சேதத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.