Asianet News TamilAsianet News Tamil

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை: சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி

IAS officer in Bihars case related to corruption Officer sentenced to 5 years in prison
IAS officer in Bihar's case related to corruption Officer sentenced to 5 years in prison
Author
First Published Nov 23, 2017, 8:04 PM IST


பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 5ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 4லட்சம் அபராதமும் விதித்து சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பீகார் மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்த போது 1996ம் ஆண்டு அங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்தது. முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார்.இவரின் ஆட்சியில் ரூ.950 கோடிக்கு மாட்டுத்தீவன ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து 1997ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து லாலுபிரசாத் யாதவ் விலகினார். 

அதன்பிறகு அவர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசில் ரெயில்வே அமைச்சராக பணியாற்றினார். இந்த நிலையில் மாட்டுதீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் ஜாமீனில் வந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் வழக்கு விசாரணை மீண்டும் ராஞ்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்ரவர்த்தி மீது தனியாக ராஞ்சி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவர் பீகார் மாநிலம் சாய்பாசா மாவட்ட கலெக்டராக இருந்த போது அரசு கருவூலத்தில் இருந்து ரூ.37 கோடி பணத்தை முறைகேடாக எடுத்து, மாட்டுத்தீவன சப்ளையாளர்களுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. 

ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்ரவர்த்தி 2014-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர் 2015 ஜனவரி மாதம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஊழல் வழக்கை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் அவரை குற்றவாளி என கடந்த 14-ந்தேதி அறிவித்தது. தண்டனை விவரத்தை 22ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதன்படி, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்ரவர்த்திக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

சஜல் சக்ரவர்த்தி ஏற்கனவே 18 மாதம் 16 நாட்கள் சிறையில் இருந்த தால் மீதம் உள்ள காலத்துக்கு சிறையில் இருக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios